Sunday, June 29, 2014

பூமியைப் போன்ற கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு !


பூமியைப் போன்ற கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு !


பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
"ஜிஜே 832 சி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பூமிக்கு 16 ஒளிவருட தூரத்தில், "ஜிஜே 832' என்ற சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை 16 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோள், பூமியைவிட ஐந்து மடங்கு பெரிதானது எனவும், "ஜிஜே 832' நட்சத்திரம், சூரியனில் பாதியளவு வெப்பத்தைக் கொண்டிருப்பதால், பூமிக்கு இணையான வெப்பநிலை அங்கு நிலவக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அந்த விஞ்ஞானிகள் குழுத் தலைவர் கிறிஸ் டின்னே கூறுகையில், ""நட்சத்திரத்தை மிக வேகமாக "ஜிஜே 832 சி' சுற்றிவருவதால், அந்த கிரகத்தில் பருவநிலைகள் வேகமாக மாறினாலும், பூமியைப் போன்ற வெப்பநிலை நிலவினால் அங்கு உயிர்கள் நிலை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனினும், அந்த கிரகம் மிகப்பெரியதாக இருப்பதால், அதன் வளிமண்டலம் மிக அடர்த்தியாக இருக்கும். இதனால் அதிக வெப்பம் கிரகிக்கப்பட்டு உயிர்கள் வாழமுடியாத சூழலும் ஏற்படலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில், இதுவரை கிளைஸ் 667சி மற்றும் கெப்ளர்-62 ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டுமே பூமியைப் போன்று இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment