Saturday, September 27, 2014

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது


முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 

4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

100 கோடி ரூபா அபராதம்!

10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த அபராதம்  குறித்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்தார்.
10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன் படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.
இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்.
எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம்.
எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.



No comments:

Post a Comment