Wednesday, April 1, 2015

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவார் பூட்டோ அரசியலில் குதிக்கிறார்?



பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் மகள்
பக்தவார் பூட்டோ அரசியலில் குதிக்கிறார்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின்  மகள்களில் ஒருவரான பக்தவார் பூட்டோ, ஜுல்பிகார் அலி பூட்டோவின்  குடும்ப வாரிசாக அரசியலில் குதிக்கிறார் என அறிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தம்பதியருக்கு பிலாவல் பூட்டோ என்ற மகனும், பக்தவார் பூட்டோ, ஆசிபா பூட்டோ என இரண்டு மகள்களும் உள்ளனர்.
பிலாவல் பூட்டோ கடந்த ஆண்டு அரசியலில் குதித்தார். ஆனால் கட்சி விவகாரங்களை கையாள்வதில் அவருக்கும், அவரது தந்தை சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் தற்போது லண்டனில் வசித்து வருகிற பிலாவல் பூட்டோ, 2 ஆண்டுகள் அரசியலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு உயர்கல்வி படிக்கப்போவதாக அவரது கட்சி (பாகிஸ்தான் மக்கள் கட்சி) வட்டாரங்கள் கூறியுள்ளன.
இருப்பினும், பூட்டோ குடும்ப வாரிசு, அரசியல் களத்தில் தொடர வேண்டும் என்று ஆசிப் அலி சர்தாரி விரும்புகிறார். இதன் காரணமாக அவர் தனது மகள் பக்தவார் பூட்டோவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பக்தவார் பூட்டோ, தனது தாய் வழி தாத்தா ஜுல்பிகார் அலி பூட்டோவின் நினைவு நாளில் (நாளை மறுதினம்) அரசியல் மேடையில் முதன்முதலாக பேச உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment