Thursday, July 2, 2015

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வேன் - மாவனல்லையில் ஜனாதிபதி

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும்
எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வேன்

-    மாவனல்லையில் ஜனாதிபதி

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார்.
தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்தது அந்த சவால்களுக்கு முகம்கொடுப்பதற்காகத்தான் எனத் தெரிவித்த ஜனாதிபதி, எவ்வித சவால்களுக்கு மத்தியிலும் சரிந்து விடாமல் முன் செல்வதற்கு தமக்கு சக்தி உண்டு எனவும் தெரிவித்தார்.
மாவனல்ல உஸ்ஸாபிட்டிய அரணாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மாணவர்களின் பாவனைக்கு ஒப்படைக்கும் வைபவத்தில் இன்று 2 ஆம் திகதி முற்பகல் கலந்துகொண்டபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று முற்பகல் வித்தியாலயத்திற்கு வருகைதந்த ஜனாதிபதியை மாணவர்கள் கோலாகலமாக வரவேற்று பாடசாலைக்கு அழைத்து சென்றனர்.
நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மாணவர்கள் பாவனைக்கு ஒப்படைத்த ஜனாதிபதி அதைப் பார்வையிட்டார்.
அறிவகம் தொலைக்கல்வி நிறுவனம், புதிய கணித கூடம், மொழி கூடம், தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான கூடம் என்பவற்றை ஜனாதிபதி பார்வையிட்டார். அத்துடன் ஜனாதிபதி அங்கு மாணவர்களுடன் அளவளாவினார்.
அதனை அடுத்து இடம்பெற்ற வைபவத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவூ செய்ய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவூம் தெரிவித்தார்.
துப்பரவேற்பாட்டு வசதிகள்கூட இல்லாத பல பாடசாலைகளைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடசாலைகள் தொடர்பாக ஆராய்ந்து பிள்ளைகள் கல்வி பெறுவதற்கு உரிய அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய துரித வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
தேசிய கல்வித் திட்டங்களில் திறன் கல்விக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் இன்று உலகத்தில் பல நாடுகள் திறன் கல்வியின்மூலம் உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
அத்துடன் சமூகத்தில் மாபெரும் துன்பச் செயலாக மாறியுள்ள போதைப்பொருள் தொல்லையை ஒழிப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு விழிப்புணர்வூட்டும் நாடளாவிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் சில வாரங்களில் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நமது நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ஆனந்த மில்லன்கொட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்துடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள். பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் வைபவத்தில் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment