Wednesday, November 30, 2016

திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி


திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி
மருத்துவமனையில் அனுமதி


திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளனர். கடந்த மாதம் 25-ம் திகதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதி ஊட்டசத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





.

வஸீலா ஸாஹிரின் “மொழியின் மரணம்” நூல் தமிழகத்தில் வெளியீடு

வஸீலா ஸாஹிரின் மொழியின் மரணம்
 நூல் தமிழகத்தில் வெளியீடு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கவிஞர் ஈழவாணியின் ஏற்பாட்டில், பிரபல இலங்கை எழுத்தாளர் மினுவாங்கொடை வஸீலா ஸாஹிரின் இரண்டாவது படைப்பானமொழியின் மரணம்எனும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா டிசம்பர் 03ஆம் திகதி சனிக்கிழமை இந்தியாவில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இல - 06, இரண்டாவது பிரதான வீதி, CIT காலனி, மைலாப்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடை பெறும்.
மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில், முதற் பிரதியை பேரா. கோவை மு.சரளா பெற்றுக் கொள்வதோடு, நூலை கவிஞர் சல்மா வெளியிட்டு வைக்கிறார்.
விழாவில், நூலின் அறிமுக உரையைகல்கிபத்திரிகையின் துணை ஆசிரியரான அமிர்தம் சூர்யா நிகழ்த்தவுள்ளார்.

ஆசிரியரின் முதல் நூலானநிலவுக்குள் சில ரணங்கள்எனும் சிறுகதைத்தொகுதி, கொழும்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல் -ஹிதாயா பாடசாலையில் அமைந்துள்ள எம். சீ. பஹார்தீன் மண்டபத்தில் அண்மையில்  வெளியிட்டு வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 22 மாணவர்கள்


சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 22 மாணவர்கள்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

வ்வாண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பிரபலமான பாடசாலையான சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் 22 மாணவ மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம் மாணவர்களைப் பாராட்டுவதோடு, இம்மாணவர்களுக்காக, இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக  இரவு - பகல் பாராது பாடுபட்ட தரம் 05 இன் பகுதித் தலைவர் .எல். வல்கீஸ் ஆசிரியை அவர்களுக்கும், வகுப்பாசிரியர்களுக்கும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால், பிரதி அதிபர் றிப்கா அன்சார் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அவர்களின்விபரம்;.




76 பேர் பலியான கொலம்பியா விமான விபத்திற்கு காரணம் என்ன?: உயிர் தப்பிய ஊழியரின் பரபரப்பு தகவல்!

76 பேர் பலியான கொலம்பியா விமான
விபத்திற்கு காரணம் என்ன?

உயிர் தப்பிய ஊழியரின் பரபரப்பு தகவல்!

கொலம்பியாவில் விமான விபத்தில் 76 பேர் பலியானதற்கான காரணத்தை அவ்விபத்தில் இருந்து தப்பியுள்ள விமான ஊழியர் ஒருவர் பரபரப்பாக வெளியிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த Chapecoense Real கிளப் கால்பந்து விளையாட்டு வீரர்கள் உள்பட 81 பேருடன் விமானம் ஒன்று கடந்த திங்கள் கிழமை புறப்பட்டுள்ளது.

கொலம்பியா நாட்டில் தென் அமெரிக்காவுடன் இறுதி சுற்று விளையாட சென்ற அந்த விமானம் திடீரென நடுவழியில் மாயமாகியுள்ளது.

சில மணி நேரம் தேடுதலுக்கு பிறகு Cerro Gordo என்ற பகுதியில் உள்ள மலையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும், விமானக் குழுவினர் உள்பட 76 பேர் இவ்விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். 3 வீரர்கள், ஒரு பணிப்பெண் உள்பட 5 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

இந்நிலையில், விபத்திற்கான காரணத்தை விமான பணிப்பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில், ‘குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாக விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் இவ்விபத்து நிகழ்ந்ததாகதெரிவித்துள்ளார்.

மேலும், விமானத்தில் எரிபொருள் சிறிதளவு மட்டுமே உள்ளதையும், விமான நிலையத்தை இனிமேல் அடைய முடியாது என்பதையும் விமானி உடனடியாக அறிந்துள்ளார்.

பின்னர், இதே நிலையில் தரையில் மோதினால் விமானம் நிச்சயம் வெடித்து சிதறும் எனவும், அதில் ஒருவர் கூட பிழைக்க முடியாது எனவும் விமானி அறிந்துள்ளார்.

இதனை தவிர்ப்பதற்காக விமானத்தில் சிறிதளவு எரிபொருளும் இருக்க கூடாது என தீர்மானித்த விமானி வானத்தில் பலமுறை சுற்றி வந்துள்ளார்.
இதற்கு பிறகு தான் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்ற விசாரணை அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, தரையில் மோதி விபத்துக்குள்ளான விமானம் வெடிக்க வில்லை.

விமானத்தில் எரிபொருள் இருந்திருந்தால் நிச்சயம் வெடித்து சிதறியிருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதேசமயம், விமானம் ஆகாயத்தில் பறந்த சாட்டிலைட் காட்சியை சோதனை செய்தபோது விபத்துக்குள்ளான விமானம் ஒரே இடத்தில் பல முறை சுற்றியுள்ளது தெரியவந்துள்ளது.


எனவே, விமானத்தில் எரிபொருள் இல்லாத காரணத்தில் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.



ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களுக்கு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை

சந்தேகநபர்களுக்கு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை

விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர் முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நவம்பர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் அறுவரும் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி (Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath Rizvi) முன்னிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.


மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் இச்சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜராக்கப்பட்ட வேளையில் வழமை போன்று நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.




வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வரும் நிலை!. விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில்
நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

 சூறாவளியாக வலுவடைந்து வரும் நிலை!
விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை



நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக வலுபெற்று வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த சீரற்ற காலநிலை நாளை நள்ளிரவு அளவில் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகரும்.

குறித்த தாழமுக்கத்தின் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இதேவேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் மக்களை விழிப்பாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tuesday, November 29, 2016

சீனப் பெருஞ் சுவரை பார்வையிட்ட மஹிந்த

சீனப் பெருஞ் சுவரை பார்வையிட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தில் சீனப் பெருஞ் சுவரையும் பார்வையிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மஹிந்த ராஜபக்ஸச சீனா சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டூள்ளது.
கடந்த 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,

சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள் சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.






பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் கொலம்பியா சென்ற விமானம்விழுந்து நொறுங்கியது 25 உடல்கள் மீட்பு

பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன்
கொலம்பியா சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது
25 உடல்கள் மீட்பு

பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் கொலம்பியா சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. 72 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் மெடிலின் சர்வதேச விமான நிலையத்திற்கு, தெற்கு பிரேசிலில் உள்ள சாபேகோயின்ஸ் கால்பந்து அணி வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் விமானம் சென்று கொண்டிருந்தது. வீரர்கள் நாளை அங்கு நடைபெற உள்ள கோபா சூடாமெரிக்கா தொடரில் பங்கேற்க இருந்தனர். இந்த விமானம் மெடிலின் நகரை நெருங்கும் நேரத்தில், மலைகள் மேல் பறந்து கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். விபத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், எரிபொருள் தீர்ந்திருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதேநேரத்தில், விமானத்தில் பயணித்தவர்களில் சிலர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது என மெடிலின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.