Monday, May 1, 2017

கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டும் - இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் கோரிக்கை


கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளருக்கு

சேவை நீடிப்பு வழங்க வேண்டும்

- இலங்கை கல்வி நிருவாக சேவை சங்கம் கோரிக்கை

(அபூ முஜாஹித்)


கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த அதிகாரிக்கு 06 மாதகாலம் சேவை நீடிப்பு வழங்க வேண்டுமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கிழக்கு மாகாண ஆளுனரிடம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மேற்படி சங்கச் செயலாளர் .எல்.முஹம்மட் முக்தார் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் புள்ளித்திட்டம் முறையற்றது என அறிவிக்கக் கோரும் வழக்கொன்று மேன்முறையீPட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாரம் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின் மட்டக்களப்பு மேற்கு, மத்தி, கல்குடா ஆகிய கல்வி வலயங்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது. பொதுவாக பதில் கடமைக்காக நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட தேவையில்லையென அரச சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் தாபன நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல கிழக்கு மாகாண ஆளுனரின் நேரடி கண்காணிப்பில் உள்ள மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவானது கிழக்கு மாகாண ஆளுனரின் தாபன நடைமுறை விதிக்கோவைக்கு முரணாக செயற்பட்டு வருகிறது.

தற்போது நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை அடிப்படையில் புள்ளித்திட்டத்தில் காணப்படும் குறைபாட்டினால் ஒரு சிரேஸ்ட அதிகாரியை விட கனிஸ்ட அதிகாரி கூடுதலான புள்ளியைப் பெற்றுள்ளதனால் நேர்முகப்பரீட்சைக் குழுவின் தலைவரும் இன்னுமொரு உறுப்பினரும் புள்ளித்திட்டம் தொடர்பான தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக அறிய வருகிறோம். இதன் காரணமாக கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக நிருவாக ரீதியான சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்குடா கல்வி நிருவாகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் கடந்த காலங்களில் அம்பாறை மட்டக்களப்பு மேற்கு, மத்தி ஆகிய கல்வி வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு மூன்று மாத காலம் முதல் ஆறு மாத காலம் வரையான காலத்திற்கு சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டன. இந்நடைமுறையை தற்போதைய கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் பின்பற்ற வேண்டுமெனவும் இல்லையேல் இது ஒரு பாரபட்சமான செயற்பாடாக கல்வி உலகில் கருதப்படும் எனவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment