Sunday, July 2, 2017

மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும் - 95வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு



மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 குருணாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல்  நடைபெற்ற 95வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில்,
மக்களின் நண்பனாக செயற்பட்டுவரும் மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்துவது நாட்டின் வறுமையை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 வெளிநாட்டு சொத்துக்களை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு கூட்டுறவு இயக்கத்திற்கு சொந்தமான பெரும்பாலான துறைகளை மேம்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை மேம்படுத்தும் அதேவேளை புதிய கைத்தொழில்களை உருவாக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
 கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் அதனை பலமான இயக்கமாக மாற்றி புதிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதுடன், கூட்டுறவு இயக்கத்தின் 2020 தொலைநோக்கை வெற்றிபெறச்செய்வதற்கு இத்துறையில் உள்ள அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 'கூட்டுறவு அபிவிருத்தி 2020 தொலைநோக்கு' திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
 கூட்டுறவு சபையினால் வடமேல் மாகாண கூட்டுறவு ஊழியர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
 சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
 வடமேல் மாகாண வீதி, போக்குவரத்து, கூட்டுறவு அபிவிருத்தி, வர்த்தக, வீடமைப்பு, கைத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் குணதாச தெஹிகமவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் அமர பிரியசிரி ரட்ணாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசாநாயக்க, வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, மற்றும் அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, எஸ். பி நாவின்ன, காமினி ஜயவிக்கிரம பெரேரா, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்கு ஹெட்டி, கூட்டுறவு ஆணையாளர் நசீர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்








No comments:

Post a Comment