Wednesday, December 25, 2019

'எல்லோரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்க' என கூறி கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் வீசிய முதியவர்


'எல்லோரும் சந்தோஷமாக
கிறிஸ்துமஸ் கொண்டாடுங்க' என கூறி
கொள்ளையடித்த பணத்தை
மக்களிடம் வீசிய முதியவர்

வங்கியில் கொள்ளையடித்த பணத்தை பொது மக்களை நோக்கி வீசியெறிந்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் 'அகாடமி வங்கி'யில் புகுந்த முதியவர் ஒருவர் தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாக கூறி அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்தார். பை நிறைய பணத்துடன் வெளியே வந்த அவர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்திற்குச் சென்று டாலர்களை அள்ளி வீசியுள்ளார்.

இதை நேரில் பார்த்த டியன் பாஸ்கல் என்பவர் தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டி: வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட அந்த முதியவர் திடீரென்று கத்தை கத்தையாக டாலர்களை அள்ளி வீசியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நான் உட்பட அங்கிருந்தோர் அனைவரும் விழுந்தடித்து பணத்தை எடுத்தோம். அந்த முதியவர் 'எல்லோரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்க' என கூறிவிட்டு மாயமானார்.

இது குறித்து கொலராடோ பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதியவர் பணத்தை கொள்ளையடித்த தகவல் கிடைத்ததும் வங்கிக்கு சென்று ஆய்வு செய்து விட்டு பணத்தை அள்ளி வீசிய இடத்தில் விசாரித்தோம். இதைத் தொடர்ந்து அந்த முதியவரை தேடிய போது அவர் ஒரு 'பாஸ்ட்புட்' கடையில் காபி அருந்திக் கொண்டிருந்ததை கண்டோம். உடனே அவரை கைது செய்தோம். அவர் பெயர் டேவிட் வேன் ஆலிவர். அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாட வங்கியில் கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டார். இப்போது அவர் சிறையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே முதியவரின் பணத்தை எடுத்த பலர் பொலிஸ் விசாரணைக்கு அஞ்சி வங்கியில் பணத்தை திரும்பத் தந்துள்ளனர். ஆனால் 'பல லட்சங்கள் இன்னும் வந்து சேரவில்லை' என வங்கி தெரிவித்துள்ளது.






No comments:

Post a Comment