Friday, June 5, 2020

'தாரிக்கிற்கு நீதி வேண்டும்' தாக்குதல் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸார் இடைநீக்கம்


'தாரிக்கிற்கு நீதி வேண்டும்'
தாக்குதல் சம்பவம் தொடர்பில்
 3 பொலிஸார் இடைநீக்கம்




கடந்த மே 25ஆம் திகதி, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்காநகரில், மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுவன், தாரிக் அஹமட் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில், 3 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் மாலை 7.45 மணியளவில் வெளியிடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவித்தலில், குறித்த சம்பவம் தொடர்பில், வீதிச் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது பணியை உரிய முறையில் மேற்கொள்ள தவறியதாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் விசேட பணிக்காக, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த களுத்துறை பொலிஸ் பாடசாலையில் பணிபுரியும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணிபுரியம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் என மூன்று பேரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈவு, இரக்கமின்றி சட்டத்தை கையிலெடுத்து, மிகக் கொடூரமாக பொலிஸாரால் தாக்கப்பட்ட தாரிக் அஹமட் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

ட்விற்றர் தளத்தில் தாரிக் அஹமட் தொடர்பில் குரல் கொடுத்து வரும் சமூக வலைத்தள பயனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், #JusticeForThariq எனும் ஹேஷ்டேக் மூலம் குரல் கொடுத்து வருகின்றனர். குறித்த ஹேஷ்டேக் கொண்ட பல்லாயிரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு வரும் நிலையில், அது தற்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செயிட் அலி ஸாஹிர் மெளலானா, நடந்தவற்றை விளக்கி, CCTV காட்சிகளுடனான ஒரு நீண்ட பதிவொன்றை அவரது ட்விற்றர் கணக்கில் இட்டிருந்தார்.



No comments:

Post a Comment