Sunday, June 22, 2014

திருப்தி கொள்ள முடியாத நிலைமையில் ஊடக சுதந்திரம் - எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு

திருப்தி கொள்ள முடியாத நிலைமையில் 
ஊடக சுதந்திரம்

- எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு


இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமைகள் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில் உள்ள ஊடக சுதந்திர நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாதுள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  
அண்மையில் அளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளின் போது செய்திகள் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியே அந்த அமைப்பு மேற்கண்டவாறு கூறியுள்ளது.   அந்தப் பகுதிகளுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சண்டே லீடர் ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் உட்படச் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும், பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.  

அத்துடன் ஊடகவியலாளர்களின் ஒளிப்படக் கருவி போன்ற சொத்துகளுக்குக் கடுமையான சேதம் விளைக்கப்பட்டிருந்தது என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.   குறித்த சம்பவங்களை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கன. இதுபோன்ற செயற்பாடுகள் இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment