Tuesday, September 2, 2014

லிபியாவில் போராளி குழுக்கள் இடையே கடும் மோதல் இரு தரப்பிலும் 31 பேர் பலி


லிபியாவில் போராளி குழுக்கள் இடையே கடும் மோதல்

இரு தரப்பிலும் 31 பேர் பலி

லிபியாவில் போராளிகள் குழுக்கள் இடையே நடந்த கடும் மோதலில் 31 பேர் பலியாயினர் என அறிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க நாடான லிபியாவில், 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சியை, 2011ஆம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்களின் உதவியுடன் இராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
ஆனாலும் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பல நகரங்களில் போராட்ட குழுக்கள் இடையே மோதல்கள் நடந்து வருவதால், டாப்ரக் நகரில் பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது.
லிபியாவில் இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்கள் அல்லாத போராட்டக்குழுக்கள்தான் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு, நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சமீப காலமாக இந்தக் குழுக்கள் அடிக்கடி மோதி வருவதால், தலைநகர் திரிபோலியும், நாட்டின் 2–வது பெரிய நகரமான பெங்காஜியும் கலவர பூமியாக மாறி வருகின்றன. லிபியாவின் விடியல் என்ற போராட்டக் குழுவின் கட்டுப்பாட்டில்தான் தலைநகர் திரிபோலி உள்ளது. இந்தக் குழு சமீபத்தில் அமெரிக்க தூதரக வளாகத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.
இந்த நிலையில் பெங்காஜி நகரில் பெங்காஜி புரட்சிகர சுரா கவுன்சில் என்றழைக்கப்படுகிற இஸ்லாமிய போராளிகள் குழுவுக்கும், முன்னாள் இராணுவ ஜெனரல் கலிபா ஹிப்டர் ஆதரவு போராளிகள் குழுவுக்கும் இடையே நேற்று முன்தினம் பிற்பகலில் கடும் சண்டை மூண்டது.

ஹிப்டர் ஆதரவு போராளிகள் குழுவின் போர் விமானங்கள், பெங்காஜி புரட்சிகர சுரா கவுன்சில் நிலைகள் மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தன. பதிலுக்கு பெங்காஜி புரட்சிகர சுரா கவுன்சில் போராளிகள் எதிரிகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை, பெங்காஜியில் உள்ள பெனினா விமான நிலையத்தை சுற்றிலும் நடந்தது.

முடிவில், ஹிப்டர் ஆதரவு போராளிகள் 20 பேரும், பெங்காஜி புரட்சிகர சுரா கவுன்சில் போராளிகள் 11 பேரும் கொல்லப்பட்டனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பெங்காஜியில் பதற்றம் நிலவுவதாக அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment