Friday, April 3, 2015

இந்தியாவில் இடம்பெற்ற பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

இந்தியாவில் இடம்பெற்ற பகவத் கீதை போட்டியில்
முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி



பகவத் கீதை தொடர்பான போட்டி ஒன்றில், 12 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் முதல் பரிசு வென்றுள்ளார்.
இந்தியாவில் மும்பை மீரா ரோடில் உள்ளது காஸ்மோபோலிடன் உயர்நிலைப் பள்ளி. இங்கு 6ம் வகுப்பு படித்து வருகிறார் மரியம் ஆசிஃப் சித்திகி எனும் சிறுமி. சமீபத்தில் மும்பையில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான பகவத் கீதை போட்டி நடைபெற்றது.
'ஸ்ரீமத் பகவத் கீதா சாம்பியன் லீக்' எனும் தலைப்பில் இஸ்கான் சர்வதேச சங்கம் நடத்திய இந்தப் போட்டியில், 105 தனியார் பள்ளிகள் மற்றும் 90 நகராட்சிப் பள்ளிகள் என‌ 195 பள்ளிகளைச் சேர்ந்த 4,500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டிக்குத் தயார் செய்வதற்காகபகவத் கீதை ஆங்கிலப் பதிப்புப் புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகளை விளக்கிக் கூற தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஒரு மாத கால தயாரிப்புக்குப் பிறகு, பகவத் கீதை கற்பிக்கும் பாடங்கள் குறித்த அந்தப் போட்டியில் அதுதொடர்பாக 100 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் சரியான பதில் அளித்து மரியம் முதல் பரிசை வென்றுள்ளார்.
இதுகுறித்து மரியம் கூறும்போது, "பகவத் கீதையின் வழியே நான் கற்றுக்கொண்டது என்னவெனில், உலகில் மிகப்பெரிய மதம் என்பது மனிதநேயம் மட்டும்தான்" என்று கூறியுள்ளார்.

தனது மகள் பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு வென்றது குறித்து மரியத்தின் தந்தை ஆசிஃப் கூறும்போது, "என்னுடைய மகள் வேறு ஒரு மதத்தின் புத்தகத்தைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறாள் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உலகில் உள்ள அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் என் குழந்தைகளுக்குச் சொல்லி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment