Sunday, May 31, 2015

அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் சேவை பெறுநர்களின் சிறப்புரிமைகளும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களின் பொறுப்புக்களும்

சேவை பெறுநர்களின் சிறப்புரிமைகளும்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியீடு


உடன் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களுக்கு நிபந்தனைகள் அடங்கி பட்டியல் ஒன்று அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சகல அரசாங்க திணைக்களங்கள், காரியாலயங்கள் மற்றும் சபைகளுக்கு அமைச்சினால் இது தொடர்பிலான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 11/2015) ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் பிரகாரம்:-

மக்கள் தினம் என்று ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் சகல அரச ஊழியர்களும் காரியாலத்துக்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டும்.

மக்கள் அனுப்புகின்ற கடிதங்களுக்கு ஒருவாரகாலத்துக்குள் பதில் அனுப்புவதாக அறிவிக்கவேண்டும்

அத்துடன் ஒரு மாதத்துக்குள் அக்கடிதத்துக்கு கட்டாயம் பதில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

மக்கள் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போது, கேள்விகள் கேட்கப்பட்டுள்ள மொழியிலேயே பதில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

பெரும் நிதியை செலவழித்து மற்றும் அரச சொத்துக்களை பயன்படுத்தி அரச வைபவங்கள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிபந்தனைகளை மீறுகின்ற அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் கால் முறிவு சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் இவருக்கு இந்த நிலை


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் கால் முறிவு

சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் இவருக்கு இந்த நிலை



பிரான்ஸ் நாட்டின் எல்லை அருகே நடந்த சாலை விபத்தில், சைக்கிள் பிரியரும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜான் கெர்ரியின் கால் முறிந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
சைக்கிள் ஓட்டுவதில் பிரியம் கொண்ட 71 வயதான அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் போதெல்லாம் தனது சொந்த சைக்கிளையும் உடன் எடுத்துச் சென்று, அங்கு சைக்கிள் பயணம் செய்வார்.
அதுபோன்று, நான்கு நாடுகள் பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவுக்கு சென்ற அவர், தனது சைக்கிளையும் எடுத்துச் சென்றார்.
ஜெனீவாவில், நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஜரிப் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். ஈரானின் அணு உலை அமைப்பது தொடர்பாக விவாதித்தார்.
இதையடுத்து தென்கிழக்கு சுவிஸ் நாட்டு எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சியான் சியர் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜான் கெர்ரி நேற்று சைக்கிளில் சென்று  கொண்டுடிருந்தார். அப்போது நடைபாதையில் இருந்த பெரிய கல் மீது ஜான் கெர்ரியின் சைக்கிள் மோதியதில் ஜான் கெர்ரி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கால் எலும்பு முறிந்தது.
வலியால் அவதிபட்ட கெர்ரி ஹெலிகாப்டர் மூலம் ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடனடி சிகிச்சைக்குப் பிறகு, அவரது நான்கு நாடுகள் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவின் போஸ்டன் நகருக்கு திரும்பியுள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜான் கெர்ரி ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக மாட்ரிட் நகருக்கு ஜூன் மாதம் முதலாம் திகதி  இன்று செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் பாரீஸில் அவர் ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதியை சந்திக்க திட்டமிடப்பட்டும் இருந்தது. ஆனால், இந்த விபத்து காரணமாக, அவரது பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டன.



சம்மாந்துறையில் எம்பி என்ற ஒரு வடையைச் துாக்கிச் செல்ல ஆயிரம் காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன

சம்மாந்துறையில் எம்பி என்ற ஒரு வடையைச் துாக்கிச் செல்ல
ஆயிரம் காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்ற

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

முதலில் இந்தக் கட்டுரையை வாசித்து உள் நுழைவதற்கு முன்னர் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ அன்றி சம்மாந்துறையின் நலனில் அக்கறை கொண்டே என்னால் எழுதப்படுகின்றது என்பதை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்.

சம்மாந்துறையில் ஒரு விடயத்தைப் பற்றித்தான் தொன்மைக் காலம் தொட்டு அண்மைக் காலம் வரை பேசிக் கொண்டிருக்கின்றார்கள் அதாவது சம்மாந்துறையில் ஒரு வடை சுடப்பட இருக்கின்றது அந்த வடையைச் துாக்கிச் செல்ல ஆயிரம் காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்ற அந்த வடையை யாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் சம்மாந்துறையின் இன்றைய அரசியல் பேச்சாக, மக்களின் மூச்சாக இருக்கின்றது.
ஒரு எம்பி என்ற வடையை வைத்துக் கொண்டு எத்தனை பேருக்கு பங்கிட்டுக் கொடுப்பது..?? நாம் கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பிளவு பட்டு, தான் ஆதரிக்கும் நபருக்குத்தான் அந்த வடை கிடைக்க வேண்டும் அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று பிரிந்து பிரிந்து வாக்குகளைச் சிதறடித்தால் இம்முறையும் எம்பி என்ற வடையை முழுங்கி விட்டு ஏப்பம் தான் விட வேண்டி வரும்.
இது வரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறையில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட இம்முறைத் தேர்தலில் போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருப்பதுகிழிஞ்சது போஎன்று சொல்லுமளவுக்கு இருக்கின்றது.
இலங்கை ஜனநாயக நாடு இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம், யார் வேண்டுமானாலும் வேட்பாளராக நிற்கலாம், நாம் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் இதில் தலையிட எனக்கோ யாருக்கோ எந்தவித உரிமையும் கிடையாது ஆனால் சம்மாந்துறையின் அரசியலைப் பொறுத்த வரை இம்முறைத் தேர்தலில் நாம் பொறுப்புணர்ச்சியோடு எமது வாக்குகளைச் சிதறடிக்காது வாக்களித்து எமக்கான பிரதிநிதியாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க கண்டிப்பாக கடமைப்பட்டுள்ளோம்.
நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இம்முறையும் நாம் சம்மாந்துறைக்கான பாராளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டால் மீண்டும் ஐந்து வருடங்கள் அடுத்த ஊரவர்களைப் பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க வேண்டும் அத்தோடு மாத்திரமல்ல வேட்பாளர்களின் எண்ணிக்கை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் இதை விட பல மடங்காக அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை, ஏன் நான் கூட களம்மிறங்கலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் ஏதோ வாசித்தோம் கருத்து தெரிவித்தோம் மற்றும் பல் இழுச்சோம் என்றில்லாமல் பொறுப்புணர்ச்சியோடு இம் முறை சம்மாந்துறைக்கு எம்பியைப் பெற்றுக் கொள்ள நான் முனைப்போடு இருந்து எனது வாக்கை சிதறடிக்காது பொறுத்தமான வேட்பாளருக்கு வாக்களிப்பேன் என்று சத்தியம் செய்து கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தாருக்கும் அறிவுறுத்துங்கள்.
சம்மாந்துறையில் இம்முறை தேர்தலில் குதிக்க இருக்கும் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால்
01.ஒரு சிலர் தாம் களமிறங்கினால் சத்தியமாக வெற்றியடைய மாட்டோம் என்று நன்கு தெரிந்தும் அவர்களது எதிர்கால அரசியல் விளம்பரங்களுக்காக குதிக்க இருக்கின்றார்கள்.
02. இன்னும் சிலர் வடிவேல் சொல்வது போன்று ஏய்..பாத்துக்கோ பாத்துக்கோ இன்னையில் இருந்து நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று சொல்வது போன்று நானும் அரசியல்வாதிதான் நானும் அரசியல்வாதிதான் என்று விளம்பரத்துக்காக குதிக்க இருக்கின்றார்கள்.
03. இன்னும் சில பேர் நாம் வெற்றியடையாவிட்டாலும் பரவாயில்ல அந்தக் கட்சியும், கட்சியின் வேட்பாளரும் வெற்றியடைக் கூடாது எனக் களமிறங்கி வாக்குகளை சிதறடிக்க முயற்ச்சிக்கின்றார்கள்.
04. இன்னும் ஒரு சில குழுக்கள், இருக்கிறவன் ஒருத்தனும் சுத்தமில்லை எம்பிக்குத் தகுதியில்லை நாம்தான் தகுதி, நாம்தான் சம்மாந்துறையை ஆள வேண்டும் என்று குதிக்க இருக்கின்றார்கள்.
05. இன்னும் சிலர் நாம் வெற்றியடையாவிட்டாலும் பரவாயில்ல சம்மாந்துறை மக்களின் மனங்களில் நம் கட்சியையும், கொள்கையையும் விதைத்து விட்டால் போதும் மற்ற கட்சிகளை சிதைத்து விட்டால் போதும் என்பற்காக குதிக்க இருக்கின்றார்கள்.
06. இன்னும் சிலர் பல காலமாக சம்மாந்துறை அரசியலில் நாம் இருந்து தாம் வகித்த பதவிற்கேற்ப நம்மால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்திருக்கின்றோம் பாராளுமன்ற உறுப்புரிமை கிடைத்தால் மேலும் பல சேவை செய்யலாம் என்ற நோக்கோடு குதிக்க இருக்கின்றார்கள்.
07. இன்னும் சிலர் நம்மிடம் காசு, பணம், துட்டு, மணி இருக்கு ஒரு பதவி இல்லையே அது இருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அந்த பதவியை அடைய குதிக்க இருக்கின்றார்கள்.
08. இன்னும் சிலர்சார் நீங்க எம்பிக்கு எழும்புங்க சார் நீங்க பொறுத்தமாக இருப்பிங்க சார், நாங்க ஆதரவு தாரம் சேர் என்று அடுத்தவன் உசுப்பேத்தி உசுப்பேத்தி உஷார் மடையர்களாக குதிக்க இருக்கின்றார்கள்.
சம்மாந்துறைக்கு எம்பியாக யார் தகுதியானவர்...??? யாருக்கு வாக்களிப்பது சிறந்தது...??? யார் குறுகிய அரசியல் ஆதாயம் தேடுகின்றார்கள்...??? யார் அரசியல் விளம்பரம் தேடுகிறார்கள்...??? யார் உண்மையாக மக்களுக்கான அரசியல் செய்கின்றார்கள்...?? எந்தக் கட்சி வேட்பாளர் ஊருககுப் பொருத்தமானவர் அப்பதவிக்குப் பொருத்தமானவர்..?? என்பதை தேர்தல் வருவதற்கு முன்னர் நன்கு ஆராய்ந்து சிந்தித்து குப்பைகளை தொட்டியில் போட்டு விட்டு அதில் இருக்கும் மணியை பொறுக்கி சம்மாந்துறை சார்பாக நம் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் அமரச் செய்ய நாம் முயல வேண்டும்.
பொறுப்புணர்ச்சி மிக்க சம்மாந்துறைக் குடிமகன் இம்முறை எம்பி இல்லாது   சம்மாந்துறையைக் கைசேதப்பட விட மாட்டான்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.

முஸ்லிம்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் பரிதாப வாழ்க்கை ஆள்கடத்தும் தரகர்களின் அராஜகம்!

முஸ்லிம்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் பரிதாப வாழ்க்கை!
ஆள்கடத்தும் தரகர்களின் அராஜகம்!!

ஆயிரக்கணக்கான வங்கதேசிகளும் ரோஹின்ஜா அகதிகளும் மிகப் பெரிய சரக்குக் கப்பல்களில் அந்தமான் கடல் பகுதியில், ஆள்கடத்தும் இடைத் தரகர்களால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கப்பல்களில் பயணம் செய்து பிறகு தப்பி வந்தவர்களிடம் நேரடியாகப் பேசியதில் இந்தக் கொடூரம் தெரியவந்துள்ளது. இந்தத் தரகர்களுக்கு மிகப் பெரிய மாஃபியா கும்பல் பின்புலமாக இருந்து செயல்படுகிறது.
தாய்லாந்து, மலேசிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆள்கடத்தும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க முற்பட்டதை அடுத்து, அவர்களை எந்த நாட்டிலும் இறக்கி விடாமல் கடலிலேயே பிணையாகப் பிடித்து வைத்துள்ளனர். அகதிகளை விட்டு அவர்களுடைய உறவினர்களுக்கு கைபேசி மூலம் பேசச் செய்து அதிகத் தொகையைக் கேட்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அகதிகளைக் கடுமையாக அடித்து அவர்கள் அலறுவதை உறவினர்கள் கேட்கச் செய்கிறார்கள். பணம் கிடைத்தால் அவர்களைக் கரைக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள். நோயாலோ, சாப்பாடு பற்றாமலோ, அடிப்பதாலோ அகதிகள் இறந்தால் அவர்களைக் கப்பலிலிருந்து தூக்கிக் கடலில் வீசிவிடுகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்குகிறார்கள்.
கரையிலும் பல முகாம்களை அதிகாரிகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இடைத்தரகர்கள் நடத்துகிறார்கள். அவற்றில் இறப்பவர்களைப் பெரிய குழி தோண்டிப் புதைத்துவிடுகிறார்கள். தெற்கு தாய்லாந்திலும் மலேசியாவிலும் இப்படி அகதிகள் புதைக்கப்பட்ட ரகசியக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரே குழியில் ஏராளமான 100 க்கு மேற்பட்ட சடலங்கள்கூடப் புதைக்கப்பட்டிருக்கின்றன.
வேலை தேடியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள், அதற்கு உதவுவதாகக் கூறும் இடைத் தரகர்களை நம்புகிறார்கள். அவர்கள் முதலில் 200 டாலர்கள் கொடுத்தால் போதும் என்கிறார்கள். பிறகு, கப்பலில் செல்லும்போது வேறு இடைத் தரகர்கள் அங்கு அடியாட்களுடன் வருகிறார்கள். அவர்கள் அதிகத் தொகை கேட்டு அகதிகளைத் துன்புறுத்துகிறார்கள்.
அகதிகள் மீது அக்கறை கொண்டு அவர்களை அரவணைக்கும்ஆங்கன்என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ் லிவா சொல்லும் தகவல்கள் நம்மை அதிரவைக்கின்றன. “இடைத்தரகர்களால் இந்தத் தொழிலை விட முடியாது. எனவே, கப்பல்களில் உள்ளவர்களைக் கரைக்கு அழைத்துவராமல் கடலிலேயே சிறைவைத்து மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். பெப்ரவரிக்குப் பிறகு, மேலும் சில ஆயிரம் அகதிகள் கப்பல்களில் சேர்ந்துள்ளனர். தாய்லாந்து முகாமில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் போல பல மடங்கு கடலில் இறந்திருக்கிறார்கள்என்கிறார்.
ரோஹின்ஜா இளைஞர் ஒருவர் கூறும்போது தெரிவித்திருப்பதாவது: “கால்நடைகளை ஏற்றிச்செல்லும் மியான்மர் படகில் ஏறி வெளிநாட்டில் அடைக்கலம் கேட்கச் சென்றேன். கடலில் 9 நாட்கள் இருந்ததற்குப் பிறகு தாய்லாந்து கடற்கரைக்கு அருகில் மிகப் பெரிய சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்டோம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். அதில் 14 நாட்கள் இருந்தோம். நாங்கள் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்ட உடனேயே ஆட்களைக் கடத்தும் 3 பேர் கையில் கைபேசியுடன் அந்தக் கப்பலில் ஏறினார்கள். யாருக்கெல்லாம் உறவினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும் என்று கேட்டார்கள். ஒவ்வொருவராக அழைத்து, உறவினரிடம் பேசி ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று சொல்லச் சொன்னார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே அடித்து அலற வைத்தார்கள். யாருடைய எண்ணும் தெரியாது, நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறியவர்களைக் கடுமையாக அடித்தார்கள். கப்பல் இன்ஜினின் சங்கிலியை பிளாஸ்டிக்கால் மூடி, அதைக் கொண்டு அடித்தார்கள். அவர்கள் அடித்த பிளாஸ்டிக் தடிக்குள்ளும் இரும்பு போன்ற கனமான எதையோ மறைத்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு அடியும் எலும்பு உடையும் அளவுக்கு இருந்தது. நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் இப்படி அடித்ததிலேயே 3 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்கள். ஒருவர் மரணித்து விழுந்தார். அவருடைய சடலத்தை உடனே கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலுக்குள் தூக்கி வீசிவிட்டார்கள்.”
தாய்லாந்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தொலைபேசி மூலம் பேசியபோது இதே போன்ற சம்பவங்களை விவரித்தார். “நான் அந்தப் படகில் பெப்ரவரி முதல் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். அவர்களால் அழைத்துவரப்பட்ட அகதிகளைத் தினமும் அழைத்து அடிப்பார்கள். சிலரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகூட அடித்திருக்கிறார்கள். அந்தப் படகில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்என்றார்.
எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பலை, அகதிகளைத் தங்க வைக்கும் கடல் முகாமாக இடைத்தரகர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் 2,000 பேர் இருந்தனர். சுமார் 2 மாதங்களுக்குக் கடலிலேயே அது இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தது. கப்பலை வாடகைக்கு எடுத்து, அகதிகளை மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்கு இடைத்தரகர்களுக்கு அதில் ஆதாயம் கிடைத்து வந்ததுஎன்கிறார் தாய்லாந்து பொலிஸ் படையின் ஆலோசகர் அப்துல் கலாம். சேனல்-4 நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி யளித்துள்ளார். இந்தக் கதைகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

-'தி கார்டியன்'




முஸ்லிம் என்பதால் நிறுவனம் ஒன்றினால் நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை தர விருப்பம்


முஸ்லிம் என்பதால் நிறுவனம் ஒன்றினால் நிராகரிக்கப்பட்ட 

இளைஞருக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை தர விருப்பம்


முஸ்லிம் என்பதால் வேலை இல்லை என்று நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு பிரபலமான அதானி குழுமத்தில் வேலை கிடைத்துள்ளது.
மும்பையை சேர்ந்த எம்.பி.. பட்டதாரி ஜேஷான் அலி கான்(வயது 23). பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த 15-வது நிமிடத்தில் அவருக்கு ஒரு பதில் வந்துள்ளது. ஆர்வமாக மின் அஞ்சலை திறந்து பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்த ஒரு வரி பதிலில் "நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.
தனக்கு வந்த மின் அஞ்சலை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து இந்த பிரச்சனை ஊடகங்களின் தலைப்பு செய்தியானது. இதனை அடுத்து அவருக்கு பல தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்தது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் அவருக்கு வேலை தர முன்வந்தன.

இந்நிலையில் ஜேஷான் அலி கான் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அதானி குழுமத்தில் வேலைக்கு சேர முடிவெடுத்துள்ளார். விரைவில் மும்பையில் உள்ள அதானி ஏற்றுமதி நிறுவனத்தில் நிர்வாக பயிற்சி பெற்று பொறுப்பேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, May 30, 2015

கல்லெறித் தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசல்


கல்லெறித் தாக்குதலுக்குள்ளான

பொரளை ஜும்ஆ பள்ளிவாசல்

நேற்று 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களின் கல்லெறித் தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசல்.
தாக்குதலுக்குள்ளான பொரளை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் உட்பட சட்டத்தணிகள் குழுவினர் உடனடியாக விஜயம் செய்து நிலைமைகளை கேட்டறிந்த போது…