Wednesday, June 3, 2015

மேகி நூடுல்ஸ் இந்தியாவில் தடை

மேகி நூடுல்ஸ்
 இந்தியாவில் தடை


"நெஸ்லே' நிறுவனத்தின் தயாரிப்பான "மேகி' நூடுல்ஸ் விற்பனைக்கு 15 நாட்களுக்கு இந்தியாவில் டில்லி மாநில அரசு புதன்கிழமை தடை விதித்தது.
 இதேபோல, ராணுவத்திலும் மேகி நூடுல்ஸýக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மிகப்பெரிய வணிக நிறுவனமாக திகழும் பிக் பஜார், மேகி விற்பனையை புதன்கிழமை முதல் நிறுத்தியுள்ளது.
 நெஸ்லே நிறுவனத்தின் "மேகி' நூடுல்ஸ் மசாலா உணவுப் பொருளில் காரீயம், மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகிய வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக இந்தியா உத்தரப் பிரதேச மாநில உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
 இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு டில்லி அரசு, கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் தொடர்புகள் பிரிவின் தலைவர் சஞ்சய் கஜுரியா, டில்லி தலைமைச் செயலகத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை புதன்கிழமை சந்தித்தார். அப்போது, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், உடல் நலத்துக்கு முக்கியத்துவம் அளித்தே தங்களது நிறுவனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நெஸ்லே நிறுவனம் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 நெஸ்லே நிறுவனத்தின் பிரதிநிதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:
 நெஸ்லே நிறுவனத்தின் அறிக்கை மீது அரசுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. எனவே, டில்லியில் "மேகி' நூடுல்ஸ் விற்பனை செய்ய 15 நாள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, தற்போது கடைகளில் உள்ள "மேகி' நூடுல்ஸ் பொட்டலங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் முழு ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றதும், அதனடிப்படையில் முழுப் பரிசோதனைக்கு "மேகி' நூடுல்ஸ் மாதிரிகள் உள்படுத்தப்படும். அதன் பிறகே "மேகி' நூடுல்û மீண்டும் விற்பனைக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.
இந்தியாவிலுள்ள பிகார் மாநிலத்தில், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பீரித்தி ஜிந்தா ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், கேரளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க அந்த மாநில அரசு முடிவு செய்தது. இந்நிலையில், மேகி நூடுல்ஸில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவே குறிப்பிட்ட ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.
 அஸ்ஸாம், மேகாலய மாநில அரசுகள், மேகி நூடுல்ஸின் மாதிரிகளை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியிருப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பது தெரிய வந்தால், அதன்மீது தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் சுவையை அளிக்கும் "மோனோசோடியம் குளூட்டாமேட்' என்ற ரசாயனப் பொருளில் ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.

 அது குறித்து டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment