Wednesday, November 25, 2015

கடிகாரம் செய்ததால் கைதான முஸ்லிம் மாணவன் ரூ. 217 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நோட்டீஸ்

கடிகாரம் செய்ததால் கைதான முஸ்லிம் மாணவன்
ரூ. 217 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நோட்டீஸ்


அமெரிக்காவில் சொந்தமாக வீட்டில் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என ஆசிரியர் தவறாகக் கருதியதால் கைதான முஸ்லிம் மாணவரின் குடும்பத்தினர் 1.5 கோடி டாலர் (சுமார் ரூ.217 கோடி) மான நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.

 சம்பவம் நடந்த இர்விங் நகரின் மேயர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்த மது முகம்மது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
 அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை கடந்த செப்டம்பர் மாதம் தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியர்களிடம் பெருமையாகக் காட்டியுள்ளார்.
 ஆனால் அது வெடிகுண்டு எனக் கருதிய ஆங்கில ஆசிரியை, பள்ளிக் காவலரிடம் புகார் தெரிவித்தார்.
 அதையடுத்து, மதின் கைகளில் விலங்கிட்டு பள்ளிக் காவலர்கள் அவரை கைது செய்தனர். சக மாணவர்களிடையே அப்பாவிச் சிறுவன் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டது அமெரிக்கர்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
 மது முகம்மதுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, அதிபர் ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து உபசரித்தார்.
 இந்த நிலையில், மது முகம்மதுவின் கல்விச் செலவை முழுமையாக ஏற்க கத்தார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் முன் வந்தது. அதனை ஏற்று, மது முகம்மது குடும்பத்தினர் கத்தார் நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர்.
 இந்தச் சூழலில், இர்விங் மாநகராட்சிக்கும், உள்ளூர் பள்ளிக் கல்வித் துறைக்கும் மது முகம்மதுவின் பெற்றோர் வழக்குரைஞர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 இர்விங் பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்தால் மது முகம்மது உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
 அவர் வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பியதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் இர்விங் மேயர் பெத் வேன் டைன் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  அந்தச் சம்பவத்தால் மதின் நற்பெயருக்கு நிரந்தரமான களங்கம் ஏற்பட்டுள்ளது.
 எனவே, இந்த இழப்புகளுக்கு ஈடாக இர்விங் மாநகராட்சி 1 கோடி டாலரும் (சுமார் சுமார் ரூ.145 கோடி), பள்ளிக் கல்வித் துறை 50 லட்சம் டாலரும் (சுமார் ரூ.72 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும்.
 மேலும், மேயர் பெத் வேன் டைனும், இர்விங் காவல்துறை தலைவரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
 இந்தக் கடிதத்துக்கு 60 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் இர்விங் மாநகராட்சி, பள்ளி கல்வித் துறை மீது வழக்கு தொடரப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






No comments:

Post a Comment