Wednesday, February 24, 2016

நன்னடத்தையால் இன்று விடுதலையானார் நடிகர் சஞ்சய் தத்

நன்னடத்தையால் இன்று விடுதலையானார்
நடிகர் சஞ்சய் தத்



மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை விடுதலையானார்.
 இந்நிலையில், அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 இந்தத் தாக்குதலுக்காக பாகிஸ்தானில் அனுப்பி வைக்கப்பட்ட ஏகே-56 ரக துப்பாக்கிகளில் ஒன்றில் வாங்கி வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
 இந்த வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, புணேவில் உள்ள எரவாடா சிறையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் சஞ்சய் தத்தின் நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு இன்னமும் 8 மாதங்களும், 16 நாள்களும் மீதமுள்ள நிலையில், அவர் இன்று காலை (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.
இயக்குநர் ஹிரானி மற்றும் சஞ்சய் தத் குடும்பத்தினர் சிறைக்கு சென்று சஞ்சய் தத்தை அழைத்து வந்தனர். பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத், செய்தியாளர்கள் சூழ்ந்த போதும் ஏதும் பேசாமல், காரில் ஏறி விமான நிலையம் புறப்பட்டு சென்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சஞ்சய் தத் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிரதீப் பாலேகர் என்பவர் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சஞ்சய் தத்துக்கு சாதகமாக சிறை நிர்வாகம் செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம்.

No comments:

Post a Comment