Thursday, June 29, 2017

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை வேறு எந்த வைத்திய சாலைகளுடன் இணைப்பதை ஏற்க முடியாது - சாய்ந்தமருது சூரா சபை தெரிவிப்பு !


சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை வேறுவைத்திய சாலைகளுடன் இணைப்பதை ஏற்க முடியாது என சாய்ந்தமருது சூரா சபை தெரிவித்துள்ளது
இது பற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (28) மாலை சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் டாக்டர் எம்..எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.
இதில், சபையின் செயலாளர் எம்..எம். சதாத், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம்.சலீம் (சர்கி) சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி எம்..ஆதம்பாவா (ரஷாதி), சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் . உதுமாலெவ்வை, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் எம்...ஜப்பார் உள்ளிட்ட அதன் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
 இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இவ் இணைவு தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளுமுகமாக விசேட கலந்துரையாடல் ஒன்று வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஜெஸீலுள் இலாஹி தலைமையில் இடம்பெற்றது.
இதில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல் - ஹாஜ் வை.எம்.ஹனீபா, மற்றும் மரைக்காயர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரியாத் மஜீத், மற்றும் சங்க உறுப்பினர்கள், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் அல் - ஹாஜ் சலீம் உட்பட உலமாக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இவ் வைத்தியசாலைகளை இணைப்பது என முன்னர் வழங்கப்பட்ட சம்மதத்தை மீளப்பெறுவது.
கிழக்கு மாகாணசபை அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட வகையில் இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல், அதுவரை, மாவட்ட வைத்தியசாலைக்குரிய சகல வசதிகளையும் வழங்கி வைத்தியசாலையை முழு வீச்சில் செயற்படுத்தல்.
இவ் வைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் மாற்றி விசேட வைத்திய பிரிவுகளை நிறுவுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, ஆனால் எந்த வைத்தியசாலையுடனும் இணைந்த விதத்தில் இதனை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதில்லை,
இவ் வைத்தியசாலையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் குவிக்கப்பட்டுள்ள பாவனைக்கு உதவாத பொருட்களை அப்புறப்படுத்தி வைத்தியசாலையையும், அதன் வளங்களையும் வைத்திய சேவைகளுக்கு உரிய விதத்தில் பயன்படுத்தல்
போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது சூரா சபையின் செயலாளர் எம்..எம்.சதாத் தெரிவித்ததாவது,
நீண்டகாலமாக சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆள்வதற்கான உள்ளுராட்சிசபையைக் கோரிநிற்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அதற்காக உள்ள வளங்களில் ஒன்றாக சாய்ந்தமருது வைத்தியசாலையும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த வைத்தியசாலையை பிறிதொரு வைத்தியசாலையுடன் இணைக்க எடுக்கப்படும் முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், சாய்ந்தமருதின் அடையாளங்களை அழிக்க எடுக்கும் முயற்சியாக ஷுறா சபை கருதுவதாகவும் தென்படுகின்றது.
சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்திசெய்ய விரும்புபவர்கள் கிழக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரினால் முன்மொழியப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தளவைத்தியசாலை என்ற அந்தஸ்த்தை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுப்பதனூடாக சாய்ந்தமருது மக்களுக்கு உதவ முடியும்.
 தங்களது கருத்துக்களை மீறி சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை. அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிபோராடவும் தயாராயுள்ளார்கள்.
வைத்தியசாலை விடயம்போன்று சாய்ந்தமருதின் ஏனைய விடயங்களிலும் ஷுறா சபை மிகுந்த கரிசனை செலுத்தி வருகின்றது. வட்டார எல்லைப் பிரிப்பில் கூட இந்த ஊரின் பெயர் குறிப்பிடப்படாது புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது என்றார்.






No comments:

Post a Comment