Monday, January 29, 2018

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் அநேக பிரதேங்களில் மழைக்கான காலநிலை மீனவர்களுக்கும் எச்சரிக்கை


வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள

தளம்பல் நிலை காரணமாக

நாட்டின் அநேக பிரதேங்களில் மழைக்கான காலநிலை

மீனவர்களுக்கும் எச்சரிக்கை



இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில்களால் மூடப்பட்டு காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் வரையிலான  கடும் மழை ஏற்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் வட பகுதியிலும் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடை பலமான காற்று வீசலாம் எனவும் அது மணிக்கு 40 கிலோமீற்றராக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கும் எனவும், இடி மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான ஆழ் மற்றும் ஆழமற்ற கடற்பரப்பில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைச்சூழவுள்ள ஆழ் மற்றும் ஆழமற்ற கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் இவ்வேளைகளில் கடல் அடிக்கடி கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் இவ்வேளையில் கடல் அதிக கொந்தளிப்பாக மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் மற்றும் கடல் சார் தொழிலில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment