Friday, August 31, 2018

மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வாயடைத்துப் போன கூட்டணியினர்



மஹிந்த அரசாங்கத்திலும்
அலரி மாளிகையில் திருமணம்
வாயடைத்துப் போன கூட்டணியினர்

கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வைபவம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த அரசாங்கத்திலும், அலரி மாளிகையில் திருமணம் நடந்துள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைகாட்சியின் ஊடகவியலாளரான ஹசந்தர ஹெட்டிஆராச்சியின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சாட்சி கையொப்பம் பெறும் நடவடிக்கை மாத்திரமே அலரி மாளிகையில் இடம்பெற்றதாகவும், இதன்போது நெருக்கமான உறவினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டதாகவும் ஹசந்தர ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
தான் அந்த காலப்பகுதியில் பரபரப்பான வேலைகளில் இருந்ததாகவும், திருமண கையொப்பம் பெற்றுக் கொள்வதற்காக இந்த தம்பதி அலரி மாளிகைக்கு வந்ததாகவும், அவர்களுக்கு திருமணம் நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தின் முதல் மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய திருமணத்தை தேர்தல் மேடைகளில் பயன்படுத்த, கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிருந்தனர்.
 இவ்வாறான நிலையில் மஹிந்தவின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளமையால் அவர்களின் திட்டம் பிசுபிசுத்துப் போனமையால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.







39ஆவது ஒசுசல கிளை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு கல்முனை நகரில் எப்போது?


39ஆவது ஒசுசல கிளை
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு

கல்முனை நகரில் எப்போது?

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39ஆவது ஒசுசல கிளை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 1157, கெட்டம்பே, பேராதனை என்ற இடத்தில் இந்த ஒசுசல கிளை அமைக்கப்பட்டுள்ளது.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் இதுவரையில் 38 ஒசுசல விற்பனை கிளைகளை நடத்தி வருகின்றது. 103 முகவர் ஒசுசல கிளைகளும் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்டுள்ளது. தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் ஒசுசல கிளைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்முனை நகரில் ஒசுசல கிளை திறந்து வைப்பது எப்போது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது நாடுபூராகவும் 360க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட  மக்கள வங்கியின் கிளைகள் அன்றிருந்த கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி அஹமத் அவர்களின் முயற்சியினாலும் கல்முனை நகரத்தின் முக்கியத்துவம் கருதியும் 23 ஆவது கிளையாக ஆரம்பத்திலேயே திறந்து வைக்கப்பட்டது.
இதற்குப் பின்னர்தான் காத்தான்குடியில் 65 ஆவது கிளையாகவும் மட்டக்களப்பில் 75 வது கிளையாகவும் மக்கள் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில்  அக்கரைப்பற்றில் 63 ஆவது கிளையாகவும் சம்மாந்துறையில் 64 ஆவது கிளையாகவும் மக்கள் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
ஆனால், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39ஆவது ஒசுசல கிளை திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கல்முனையில் இன்னும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கல்முனை நகரம் முக்கியத்துவம் இல்லாத நகரமாக மாறிவிட்டதா? இல்லை இப்பிரதேசத்தில் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாத அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கிறார்களா என கல்முனப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.






அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் அமைச்சர் ஒருவரின் மருமகனாம்


அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட இளைஞர்
அமைச்சர் ஒருவரின்  மருமகனாம்


                                                
அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவில் .எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மொகமட் நிசாம்டீன் என்ற 25 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன், சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
கலாநிதிப் படிப்புக்காக அவுஸ்ரேலியா சென்ற இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று கென்சிங்டனில், தீவிரவாத முறியடிப்பு கூட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திக்கு,



மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம்



மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி
பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம்

மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் உலப்பனை முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வான் ஒன்று நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் உலப்பனை பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி குடியிருப்பு ஒன்றின் மீது குடைசாய்ந்தத்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வான் வண்டியில் பயணித்தவர்கள் நாவலபிட்டி கலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மஹியங்கனை பகுதியில் வழிப்பாடு ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது, வான் வண்டியில் அதிகமாக சிறுவர்களே பயணித்துள்ளதாகவும், குடைசாய்ந்த பகுதியில் உள்ள வீடு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வான் வண்டியும் சேதமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வான் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



கிளிநொச்சி படுகொலை நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்



கிளிநொச்சி படுகொலை

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்!
சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில்,
குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.
பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, கடந்த 28ம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.
பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றோம்.
வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது.
அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையில் வந்தமையால் கழுத்தில், தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

பின்னர் இறந்தவள். பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக, அவளது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டேன்.
இதன் பின்னர், கனகபுரம் பகுதியில் அவளின் ஆடைகளை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல வீட்டுக்கு வந்தேன்.
வந்து பின்பக்கமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில், ஹெல்மட் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன்.
அதனை, குடித்து நானும் சாக வேண்டும் என நினைத்த போதிலும், பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் மறைத்து வைத்துவிட்டேன்.
சம்பவ இடத்தில் இடுப்பு நாடா மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன்.
சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன்என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த போது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து நேற்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரால் தடையப்பொருட்கள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் ஆடைகள் போன்றவற்றை மீட்ட பொலிஸார், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கிள் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட் மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர்.
அம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட ஆடைகள் என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிஸார் மீட்டிருந்தனர். பின்னர் அவரது மனைவியின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன.







பொத்துவில் வீட்டுத் திட்ட சர்ச்சை



பொத்துவில் வீட்டுத் திட்ட சர்ச்சை



பொத்துவில் சிரியா பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 50 வீட்டுத்திட்டமானது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் அதீத முயற்சியினால் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டமாகும். குறித்த நிறுவனமானது இலங்கை முழுவதும் பல இடங்களிலும் இவ்வாறு மக்கள் பயனடையக் கூடிய வீடமைப்புத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வாறு கட்டிக் கையளிக்கப்பட்ட வீடுகளில் இன்றும் வீடற்ற ஏழை மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில் பொத்துவிலில் இடம்பெறுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பான செய்திகளையும் காணொளிகளையும் சமூக வலைத்தளத்தில் நாம் காணமுடிகிறது. அதனுடைய விடயம் தொடர்பாக களத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அலுவலர் எம்.எச்.ஜவாஹீர் அவர்களிடம் வினவியபோது, இந்த வீட்டுத்திட்டத்திற்கான பொருட்கள் பல விநியோகத்தர்களிடமிருந்து கிடைப்பதாகவும் பொருட்களின் உறுதித்தன்மை பரீட்சிக்கப்பட்டு தரமானவை மாத்திரமே கட்டிட வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், தரமற்றவை மீளவும் விநியோகத்தர்களிடம் திருப்பி அனுப்பப்படுவதாகவம் தெரிவித்தார்.
தவிசாளரினால் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் படங்களிலும் தரமற்ற பொருட்கள் விநியோகத்தரின் ட்ராக்டர் வண்டியில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட தயார் நிலையில் இருக்கும் ஆதாரபூர்வமான காட்சிகளும் பதிவாகியுள்ளன. பொருட்களின் தரங்களின் பரிசோதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட கற்களையே குறித்த வீடியோவில் உடைத்துக் காட்டி பொய்யான பிரதிமையை வெளிக்காட்ட முயற்சிக்கப்படுகிறது. அத்தோடு கட்டடத்தின் சில பகுதிகளும் தள்ளப்பட்டு உடைத்துக் காண்பிக்கப்படுகிறது. நேற்றுக் கட்டப்பட்ட சுவரை அவ்வாறு தள்ளுகிறபோது அது இலகுவாக பெயர்ந்துவிடுவது வழக்கம். உண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களும் உறுதியாகவே உள்ளன.
நிராகரிக்கப்பட்ட பொருட்களைப் படம்பிடித்துக்காட்டி முழு செயற்றிட்டமும் தரக்குறைவாக கட்டப்பட்டிருப்பதாக ஒரு விம்பத்தை பிரதிமை செய்ய சுயலாப அரசியல் நோக்கமுடைய சிலர் முயற்சிக்கிறார்கள். தரமற்ற கட்டுமானப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவரும் இவ்வீட்டுத்திட்டம் சமூகத்திற்கு பயன்பெறக் கூடிய வகையில் இத்திட்டம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். சுயலாப அரசியல் நோக்கம் எது நன்மையைக் கொண்டுவருவது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

IS உடன் தொடர்பாம்; 25 வயது இலங்கையர் ஆஸியில் கைது ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு



IS உடன் தொடர்பாம்; 25 வயது இலங்கையர் ஆஸியில் கைது
ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு

IS (Islamic State - 'இஸ்லாமிய ஆட்சி') என அழைக்கப்படும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் கமர் நிலார் நிஸாம்டீன் எனும் 25 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கலாநிதி பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள குறித்த மாணவன், அவுஸ்திரேலியாவின் கென்சிங்டனிலுள்ள, நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் குறித்த இளைஞரின் கணனியில் (Notebook) ஐஎஸ் அமைப்பினால் உந்துதலளிக்கும் வகையிலான விடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத நடவடிக்கைக்கு துணைபோகும் வகையிலான விடயங்களை சேகரித்தல்; அது தொடர்பிலான ஆவணங்களை தயாரித்தல்; அதில் ஈடுபடுதல் அல்லது அதற்கு உதவியாக இருத்தல் எனும் சட்டத்தின் கீழ், அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது கணனியில், தீவிரவாதத்திற்கு துணைபுரியும் வகையில், இடங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலான முக்கியமான பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.
மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மூலம், குறித்த தகவல்களில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தகவல் சேகரிக்கப்பட்டுள்ள இடங்கள், மிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸெட்லேண்டில் (Zetland) அவர் தங்கியிருந்த இடத்தை இன்று (31) காலை சோதனையிட்டபோது, பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியமானதாகும் என்பதோடு, மிகப் பாரதூரமானதாகும் எனவும், அதனை குறைவாக மதிப்பிட முடியாது எனவும் அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாணவருக்கான வீசா அனுமதியின் அடிப்படையில் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிஸாம்டீனின் வீசா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிஸாம்டீன் அவுஸ்திரேலியாவில் இது வரை எவ்வித குற்றச்செயல்களும் ஈடுபடவில்லை எனவும், ஐஎஸ் அமைப்பிலோ அல்லது எவ்வித தீவிரவாத அமைப்புகளுடனோ தொடர்புட்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இது தெடர்பில் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு உள்ளூர் நீதிமன்றமான வெவர்லி (Waverley) நீதிமன்றில் இன்று (31) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.
வழக்கு தொடர்பில் நிஸாம்டீனினால் பிணை கோரப்படாத போதிலும், பிணை வழங்க முடியாது என உத்தியோகபூர்வமாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை, எட்டு வாரங்களுக்கு நிஸாம்டீன்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.