13-வது சட்டத் திருத்தம் குறித்து மோடியிடம் வலியுறுத்துவோம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள்


பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, இலங்கை அரசியல் சாசன 13-வது சட்டத் திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தவிருப்பாக இந்தியா சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடி பிரதமராக பதயேற்ற பின்பு, இந்திய அரசுடன் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்த அக்குழு நேற்று 21 ஆம் திகதி  வியாழக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டது.
புது டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று வெள்ளிக்கிழமை (22-ஆம் தேதி) அக்குழு சந்திக்கிறது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அந்தக் குழு சனிக்கிழமை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா புறப்படும்போது எம்.பி.க்கள் குழுவைச் சேர்ந்த எம்.. சுமந்திரன் கூறுகையில், ""ஏற்கெனவே இந்திய அரசிடம் வாக்குறுதி அளித்திருந்தபடி, அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை வற்புறுத்துமாறு இந்தியாவிடம் நாங்கள் வலியுறுத்துவோம்'' என்று கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், 1987-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு இடையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் இலங்கை அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும், அந்தத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ் தரப்பினரால் குறை தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இறுதிக்கட்டப் போருக்குப் பின் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
அதனைத் தொடர்ந்து, 13-வது சட்டத் திருத்தத்தின்படி பொலிஸ் அதிகாரமும், நிலங்கள் மீதான அதிகாரமும் மாகாண அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
எனினும், 2 அதிகாரங்களையும் வழங்க இலங்கை அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மாகாண அரசுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால், அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று சில அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top