தடைகளை மீறி, கொழும்பில்
தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்தும், இலங்கை அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று 13 ஆம் திகதி புதன்கிழ்மை 1.00 மணிக்கு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாளிகாவத்தை தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை சென்று கண்டன உரையாற்றுவது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது.
எத்தனை தடைகள் வந்தாலும் ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெரும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவித்தது. அதனடிப்படையில் இன்று மதியம் 1.00 மணிக்கு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் இருந்து போராட்டம் ஆரம்பமாகியது.
ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்திற்கு கொழும்பு, பஞ்சிகாவத்தை சந்தி வரை பேரணியாக செல்வதற்கு போலிஸ் அனுமதி வழங்கியது.
மாளிகாவத்தை தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் இருந்து நடை பவனியாக சென்ற பேரணி மாளிகாவத்தை போலிஸ் நிலையம் முன்பு வரை இடம் பெற்றது.
ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டது.
• பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டு பாலஸ்தீன மக்களின் வாழ்வு வழமைக்கு திரும்புவதற்கு ஐ.நா சபை உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.
• இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபை தனது அமைதிப் படையை இறக்கி உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும்.
• இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் இலங்கை அரசு உடனடியாக முறித்துக் கொண்டு பாலஸ்தீனத்துடனான தனது உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்
என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
பலஸ்தீன முஸ்லிம்களுக்காக மனித நேயத்தை வெளிப்படுத்தும் விதமாக இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
0 comments:
Post a Comment