கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வைத்தியசாலையின்  அத்தியட்சகர் வருத்தம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் உண்மைக்கு புறம்பான சில விடயங்களைக் கூறி வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை எந்த அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  அத்தியட்சகர் டாக்டர் .எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அண்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வைத்தியசாலைக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வும், குறித்த உறுப்பினர்களைக் கொண்டு சபை ஒன்றை அமைக்கும் நிகழ்வும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
டாக்டர் .எல்.எம்.நஸீர் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் சில ஊடகங்களில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பெயரைக் கூறி, சில தவறான சம்பவங்கள் நடந்ததாக நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த செய்தி நிறுவனத்துடன் தான் தொடர்பு கொண்டு உண்மைக்கு புறம்பான இச்செய்திக்கு தனது பலமான எதிர்ப்பை தெரிவித்ததாகவும், குறித்த செய்தியில் சொல்லப்பட்ட எந்த விடயமும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
செய்தியில் சொல்லப்பட்ட விடயம் சம்மந்தமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் என்ற முறையில் தன்னிடமோ அல்லது சம்மந்தப்பட்ட எவரிடமும் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு தரக்குறைவாக செயற்படும் ஊழியர்கள் இங்கு கடமை செய்யவில்லை என்றும், அவ்வாறு யாராவது செயற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டல் தராதரம் பாராது நடவடிக்கை எடுத்து இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில், அக்கறையுள்ள எவரும் பங்குகொள்ள முடியும் என்றும் அவ்வாறானவர்களின் சேவையை பொருந்திக் கொள்ள தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரித்த செய்தி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் வைத்தியசாலை தொடர்பான விடயங்களை பிரசுரிக்கும் போது ஊடக தர்மத்தை பேணி நடப்பது நன்று என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள 45 வைத்தியசாலைகளுக்கு, வைத்தியசாலைக் குழுக்களை அமைப்பதற்கான, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த அடிப்படையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 39 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து குறித்த 39 உறுப்பினர்களில் இருந்து வைத்தியசாலைக் குழு சபையோரால் தெரிவு செய்யப்பட்டது.
சபைக்கான செயலாளர் வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்டார். செயலாளராக எம்..எம்.பர்சானும் தலைவராக சபையின் தீர்மானத்துக்கு அமைய சட்டத்தரணி யூ.எம்.நிசாரும், பிரத்தித் தலைவர்களாக .எம்.எம்..அத்னானும், பெறியலாளர் எம்.பீ.அலியாரும், பொருளாளராக .சீ..சத்தார் மற்றும் கணக்குப் பரிசோதகராக பொறியலாளர் எம்.வை..சக்கூர், எம்.எம்.எம்.ஹுசைன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்ட சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் சட்டத்தரணி யூ.எம்.நிசார் தலைமை தாங்கினார். அவர் தனது உரையின் போது, வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்கு சபையினர் ஒன்றிணைந்து தங்களால் ஆன எல்லா சக்திகளையும் ஒன்றிணைத்து செயற்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதேச அரசியல்வாதியின் ஒத்துழைப்பை கோரி அவரது ஒத்துழைப்புடனும் இவ்வைத்தியசாலையை பிராந்தியத்தில் சிறந்த வைத்தியசாலை என்ற, மட்டத்துக்கு உயர்த்திச் செல்ல வேண்டும் என்றும், அதற்காக குழு ஒன்றை அமைத்து செயற்பட வேண்டும் என்றும் சபையில் கருத்துக்கள முன்வைக்கப்பட்டன.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெற்றுள்ள இரத்த வங்கி மற்றும் விபத்துச் சிகிட்சைப் பிரிவு போன்றவற்றை நிர்மாணிப்பதில் உள்ள தடைகளை கண்டு அவற்றை நிவர்த்தி செய்து உடனடியாக குறித்த வசதிகளை இவ்வைத்தியசாலைக்கு கிடைக்க அயராது உழைப்பது என்றும் சபையால் தீர்மானிக்கப்பட்டது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top