கல்முனைப் பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நல்லாட்சியில் நிறைவேற்றப்படவில்லை
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் கவலை
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் உள்ள
முஸ்லிம், தமிழ் மக்கள் நன்மை பெறக் கூடிய எந்த ஒரு பாரிய அபிவிருத்தி
நடவடிக்கைகளும் இந்த நல்லாட்சியில் இடம்பெறாம இருப்பது குறித்து முன்னாள்
வர்த்தக,வாணிபத்துறை அமைச்சரும் முஸ்லிம்களின் சிரேஷ்ட அரசியல்வாதியுமான
ஏ.ஆர்.மன்சூர் கவலை தெரிவித்தார்.
குறிப்பாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு
விடயத்தில் இந்த நல்லாட்சியில் எவரும் பேசுவதாக இல்லை என்றும் கவலை வெளியிட்டார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை கடற்கரை மைதானத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து தனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சனத்திரளை பார்க்கவில்லை எனத் தெரிவித்த்துடன் அவர் சென்ற இடமெல்லாம் இம்மக்கள் கூட்டத்தை சிலாகித்துப் பேசியிருந்தார்.
இக்கூட்ட்த்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்ட்த்தில் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. கவனத்தில்
எடுக்கப்படுவதாகவும் இல்லை.
இது போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனை சந்தாங்க்கேணி மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக்கென தனியான அதிகார சபை ஒன்றை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அதுபற்றி எந்த நடவடிக்கையும்
இல்லை.
இந்த நல்லாட்சியில் அம்பாறைக் கரையோரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்,
தமிழ் மக்கள் நன்மை அடையக் கூடிய எந்த ஒரு பாரிய அபிவிருத்தி திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படாமல்
இருப்பது என் போன்றவர்களுக்கு வேதனை அளிக்கக் கூடியதாக் இருக்கின்றது.
கல்முனையில் உள்ள அரச செயலகக் கட்டடத்திற்குப் பின்னால் உள்ள
பகுதியில் பாரிய கட்டடம் ஒன்றுக்கு அத்திபாரம் இட்ட நிலையில் சுமார் 30 வருடங்களாக
ஒரு இடம் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. இதுபற்றி அதிகாரத்தில் உள்ள எமது பிரதேச அரசியல்வாதிகள்
எவரும் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதாக இல்லை இவ்வாறு முன்னாள் அமைச்சர் மன்சூர் கவலை
வெளியிட்டார்.

0 comments:
Post a Comment