சாய்ந்தமருது மக்களுக்கு என தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கப் பெறுவதை அறிந்து கொண்ட சிலர் அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில் யாரோ பெற்றெடுத்த பிள்ளைக்கு யாரோ பெயர் வைத்த கதையாக பெயர் எடுக்க முன் வருவது வேடிக்கையான விடயமாக இருப்பதாக முன்னாள் கல்முனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் தற்போதய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை பல தடவைகள் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இவர்களுடன் நானும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சந்திக்கச் சென்றுள்ளேன்.
இது மாத்திரமல்லாமல் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து கடந்த வருடம் அக்டோ 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (21/10/2016) பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து மக்களுக்கு இது சம்பந்தப்பட்ட விடயங்களை அமைச்சர் மூலமாக தெளிவுபடுத்தினோம்.
இப்படியான நிலையில் ஒரு சிலர் பொதுத்தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து காலத்தைக் கடத்திவிட்டு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை சரிவருவதை அறிந்து கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாட வருகின்றனர். இப்படி அவர்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு வெட்கப்படல் வேண்டும். இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்
இது குறித்து அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்ததாவது, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கொண்டு வருகிறார்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது இதனை நேரடியாக கண்டுகொள்ள முடிந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எனினும் அதனை வென்றெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் இரகசியம் பேண வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால்தான் நான் தனியாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடனும் சென்று அடிக்கடி அமைச்சர் பைஸர் முஸ்தபாவை இது விடயமாக சந்தித்து பேசுவதை ஊடகங்களுக்கு மாத்திரமல்லாமல் எனக்கு நெருங்கியவர்களிடம் கூட வெளிப்படுத்தாமல் இரகசியம் பேணி வந்தேன்.
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரை நாம் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது அமைச்சரும் அங்கிருந்த அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோரும் இது தொடர்பில் எடுக்கப்பட்டு வருகின்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எமக்கு எடுத்துக்கூறினர்.
அதன் பிரகாரம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி பிரகடனத்தை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் என நான் திடமாக நம்புகின்றேன்.
அதேவேளை இதனைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அதாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயத்தை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நேரடியாக சொல்லி தடுக்க முடியாது என்பதனால் தமிழ் தரப்பினரை பிழையாக வழிநடத்தி, அவர்கள் மூலம் உள்ளூராட்சி அமைச்சர் தொடக்கம் பிரதமர், ஜனாதிபதி வரை இதற்கு எதிராக முறையிட்டு மகஜர்களை அனுப்பச் செய்து தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கல்முனை நகரில் இடம்பெற்ற தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பிரதமர் ரணிலைக் கொண்டு தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கித்தரப்படும் என்று பிரதமரின் நாவினால் ஓர் உறுதிமொழியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருந்தார்.
ஆனால் ஒன்னறரை வருடம் கடந்தும் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதும் உள்ளூராட்சி அமைச்சருக்கு பிரதமர் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்பதும் முஸ்லிம் காங்கிரஸின் நாடகத்தையும் நயவஞ்சகத்தனைத்தையும் அளவிட போதுமான சான்றாகும்.
அதேவேளை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நாம் சாய்ந்தமருத்துக்கு அழைத்து வந்து அவர் பகிரங்க உத்தரவாதம் வழங்கியதுடன் முஸ்லிம் காங்கிரஸின் படம் காட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தியதனால் ஆத்திரமடைந்த ரவூப் ஹக்கீம், இனிமேல் உள்ளூராட்சி அமைச்சரும் அவரை அழைத்து வந்தோரும் முடியுமானால் இந்த உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்கட்டும் என்ற தோரணையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு எம்பக்கம் பந்தை அடித்து விட்டிருந்தார்.
இந்நிலையில் நாம் எமது முயற்சிகளை வீரியமாக்கி, உள்ளூராட்சி அமைச்சருடன் பிண்ணிப்பிணைந்து, தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் அறுவடையை கண்டுகொள்ள முடியும்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான எமது போராட்டம் நான் பிறந்த மண்ணுடன் கலந்த உணர்வின் உந்துதலாகும். அந்த உள்ளூராட்சி அதிகாரத்தை சாய்ந்தமருது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
முஸ்லிம் காங்கிரஸ் .தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதி அமைச்சர் ஹரீஸும் இனியாவது இதனைத் தடுக்கின்ற முயற்சிகளை கைவிட்டு, உங்களை முழுமையாக ஆதரித்து அதிகார பதவிகளில் இருத்தியமைக்காகவேனும் சாய்ந்தமருது மக்களுக்கு உபத்திரம் செய்யாமல், மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர் ஆகியோரும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுடீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருதில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து (21/10/2016) திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது இந்த உறுதிமொழியை வழங்கினார்.
கலாநிதி ஏ.எம் ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து உரையாற்றுகையில்
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கை இனி நிறைவேறப் போகின்றது. இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது.
இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை ஒன்று வேண்டுமென என்னிடம் வேறுசில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் இதய சுத்தியாக இந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்படங்களுக்காகவும பத்திரிகை விளம்பரங்களுக்காவுமே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
ஆனால், அமைச்சர் றிசாத்தைப் பொறுத்தவரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டு இதய சுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதை பகிரங்கமாக இவ்விடத்தில் கூறுகின்றேன். இவ்வாறு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸ்
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் வாக்குறுதியை பெற்றுக்கொடுத்ததாகவும் அமைச்சர் றவூப் ஹக்கிம் தலைமையில் பலசந்தர்ப்பங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் தற்போது அதற்க்கான காலம் கணிந்துள்ளதாகவும் கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ.ஹனிபா தலைமையில் 2017-08-12 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் தன்னை சிலர் பிழையாக நோக்குவதாகவும் தான் அந்த விடயத்தில் மிகுந்த இறைஅச்சத்துடன் செயற்படுவதாகவும் பள்ளிவாசலில் வைத்தே வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.








0 comments:
Post a Comment