அஸ்பெஸ்டஸ் பொருட்களை எதிர்வரும் ஆண்டில் தடைசெய்வதன் காரணமாக செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை கொண்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இத்துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் ஆர்வம் கொண்டுள்ளோம் என்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹேட்டலில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிறமெல் கிலாஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், இலங்கை பீங்கான் மற்றும் கண்ணாடி ரக கவுன்சிலின் தலைவருமான சஞ்ஜே திவாரி மிடாயா செரமிக் கம்பனி லிமிட்டட்டின் தலைவரும், கவுன்சலின் முன்னாள் தலைவருமான எஸ். எல். சி.ஜீ.சி தயாசிறி வர்ணகுலசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் களியும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களும் உயர்ந்த தரம் கொண்டவை. நமது பீங்கான் உற்பத்திப் பொருட்களும், கண்ணாடி பொருட்களும் இலகுவில் சேதமடையாதவை.

2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் இலங்கையின் மொத்த பீங்கான் மற்றும் கண்ணாடி ஏற்றுமதிப் பொருட்களின் பெறுமதியானது 61 மில்லியன் டொலரிலிருந்து 50மில்லியனாக குறைவடைந்துள்ளது.

இது தற்காலிக பின்னடைவாக இருந்தபோதும் தற்போது இத்துறைகளின் வளர்ச்சி வீதம் படிப்படியான நேரான அதிகரிப்பைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

பீங்கான் உற்பத்தித்துறையில் இலங்கைக்கு நீண்டகால வரலாறு உண்டு. எமது உற்பத்திப் பொருட்கள் தரமாகவும், இலகுவில் சேதமடையாததாகவும் இருப்பதனாலேயே உலகச் சந்தையில் இப்பொருட்களுக்கான போட்டித் தன்மை அதிகரித்து வருகின்றது. இந்தப் போட்டித்தன்மையை அடுத்து எங்களது தயரிப்புக்களுக்கான உற்பத்திச் செலவை குறைத்து உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிதன் அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

செங்களி தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம். நமது நாட்டின் செங்களியானது தரமானதும், கூரை ஓடுகளை தயாரிப்பதற்கான சிறந்த கேள்விகளைக் கொண்டதுமாகும்.

அடுத்தாண்டு முதல் அபெஸ்டஸ் இறக்குமதியை தடைசெய்யும் திட்டம் இருப்பதால் இலங்கையில் களிக்கான கேள்வி இன்னும் அதிகரித்து அதன் மூலம் மேற்கொள்ளப்படும் தயாரிப்பு பொருட்களுக்கு கேள்வியும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் தேசிய பொறியில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முதன்முதலாக கூரை ஓடுகளை உலர்த்தும் நிலையத்தை தங்கொட்டுவையில் அமைத்துள்ளோம்.

மேலும் செங்களி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 இலங்கையரை பெல்ஜியம், சீன நாடுகளில் தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்கு அனுப்பியுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top