வீதி அபிவிருத்தி விளம்பரப் பலகையை
கல்முனை மாநகர சபை அகற்றவில்லை
முதல்வர் ஏ.எம்.றகீப் மறுப்பு!


கல்முனை கடற்கரைப் பள்ளி அமைந்துள்ள வீதியை அபிவிருத்தி செய்வதற்கான விளம்பரப் பலகையை கல்முனை மாநகர சபை அகற்றவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஐ.தே.க.வின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப் பள்ளி அமைந்துள்ள வீதியை அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண விழாவின்போது நடப்பட்ட விளம்பரப் பலகையில், தரவைக் கோயில் வீதி எனும் பெயர், கடற்கரைப் பள்ளி வீதி என மாற்றப்பட்டிருப்பதாக கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவர் என்னிடம் முறைப்பாடு செய்ததுடன் அந்த விளம்பரப் பலகையை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த விடயத்தை வைத்து இனமுரண்பாடுகளை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் என்பதால், குறித்த விளம்பரப் பலகையை அகற்றுமாறு ஐ.தே.க.வின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் அவர்களை அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் அது விடயமாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வேளையில், இனந்தெரியாத நபர்களினால் இப்பெயர்ப் பலகை அகற்றிச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது..

எளினும் இது மாநகர சபையினால் அகற்றப்பட்டதாகவும் அதற்காக மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரது பெயரில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும். இந்நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட வில்லை என்பதை சம்மந்தப்பட்டோருக்கு அறியத்தருகின்றேன்.

அதேவேளை, எதிர்காலங்களில் கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான வீதிகளை அபிவிருத்தி செய்வதாயினும் அது தொடர்பில் விளம்பரப் பலகை நடுவதாயினும் மாநகர சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றேன்.

அனுமதி பெறப்படாத இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.

Mayor's Media

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top