Monday, June 23, 2014

கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் நியமனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நியாயமாக நடந்துள்ளது. - கல்முனை மாநகரம்

கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் நியமனத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் நியாயமாக நடந்துள்ளது.

கல்முனை மாநகரம்


கல்முனை மாநாகர சபை பிரதி மேயர் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சரியான முடிவை எடுத்திருப்பதாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அமைச்சர் அதாஉல்லா தரப்புடன் இணைந்து கொண்டதனால் கல்முனை மாநகர சபையில் பிரதி மேயர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில், பிரதி மேயர் பதவிக்கு பலரும் ஆசைப்பட்டவர்களாக கட்சித் தலைமைக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர். குறிப்பாக பிரதி மேயர் பதவி சாய்ந்தமருதுப் பிரதேசத்திற்கு வழங்கப்படுவதுதான் பொருத்தமான நிலைப்பாடாகும் என்று கட்சி மேல்மட்டம் கருதியது. காரணம் மேயர் பதவியை விட்டுக் கொடுத்தது சாய்ந்தமருது ஊராகும். அந்த வகையில் அந்த மண்ணுக்குத்தான் பிரதி மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலும் கல்முனை தொகுதி மக்களும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போராளிகளும் உடன்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழமையாக அர்ப்பணித்து சேவையாற்றி வரும் கட்சியின் பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீதை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக ஆக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதால் அப்துல் மஜீத் மாநகர சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் வரைக்கும் பிரதி முதல்வர் பதவியை தற்காலிகமாக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்..எம்.பிர்தௌசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான பிர்தௌசுக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கட்சி எப்போது ராஜினாமாச் செய்யச்சொல்கின்றதோ, அந்த வினாடியே அதை ராஜினாமாச் செய்வார் என அறியவருகின்றது. அந்த வகையில் பார்க்கும்போது பிர்தௌசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் பிரதி முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது மிகச்சரியான முடிவாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுஸ் கட்சிக்காக தன்னை முழமையாக அர்ப்பணித்தது மட்டுமல்லாது, தனது குடும்ப உறவுகளையே படுகொலை மூலம் இழந்தவர்தான் முழக்கம் அப்துல் மஜீத் ஆகும்.
கடந்த மாநகர சபைத் தேர்தலில் முழக்கம் அப்துல் மஜீத் போட்டியிட்டிருந்தாலும் பிரதேச வாதம் காரணமாக தோல்வி கண்டிருந்தார். அது மட்டுமல்ல கட்சியின் பிரதித் தலைவரின் வெற்றிக்காக கட்சி எந்த முன்னடுப்புக்களையும் செய்யாது அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் பிழை செய்திருந்தது. தமது பிழையை திருத்திக் கொள்வதற்காகவும், கல்முனை மாநகர சபையின் ஆட்சியை சிறப்பாகக் கொண்டு செல்வதற்காகவும் முழக்கம் அப்துல் மஜீதை பிரதி முதல்வராக நியமிக்கவுள்ளது.
இந்த முடிவை கட்சியின் அம்பாரை மாவட்ட போராளிகள் மிக சந்தோசத்துடன் வரவேற்றுள்ளதுடன் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ஆகியோருக்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஒரு சிலர் இந்த விடயத்தை பிரதேசவாதமாக்கி கட்சியை கேள்விக்குட்படுத்த நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாலேயே சிலர் அரசியல் அதிகாரத்தை பெறுகின்றனர். அந்தக்கட்சியில் இல்லையென்றால் ஒருவர்கூட அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
முஸ்லிம் மக்கள் நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற சூழ்நிலையில் பதவிக்காக சண்டை பிடிக்க ஒரு கூட்டம் அலைமோதுகின்றது. கட்சி என்ன முடிவை எடுத்திருக்கின்றதோ அதுதான முடிவாகும். கட்சியின் முடிவை எதிர்ப்பவர்களுக்கும், குள்ளத்தனமான வேலைகளைச் செய்வர்களுக்கும் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் கட்சிப்போராளிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment