Wednesday, October 31, 2018

மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட
பதவியில் இருக்கமாட்டேன்
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன



ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால், ஜனாதிபதியா தான் ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தார்.

அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க தன்போக்கில் பயன்படுத்தியதால் தான், அவரை பதவிநீக்கும் முடிவுக்கு வந்ததாகவும், 2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட எடுத்த முடிவை விட இது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது பிணத்தின் மீதே நடக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து - பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்



மத அவமதிப்பு வழக்கில்
கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து
பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்

  


பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கு மேல்மூறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறாமல் இருக்க பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என லாகூர் சிறையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசியா பீவி தெரிவித்துள்ளார்.

ஆசியா பீபியின் விடுதலை செய்தி தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவரது கணவர் ஆஷிக் மசிஹ் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஆசியா பீபி குற்றமற்றவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.








மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி



மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது
கீழே விழுந்த  அதிகாரி

இது அபசகுனத்திற்கான அறிகுறி என 
சமூக வலைதளங்களில் செய்தி


புதிய பிரதமராக ஹிந்த ராஜபக் பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. அதே நேரம் இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இலங்கையில் புதிய பிரதமராக ஹிந்த ராஜபக் நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

கீழே விழுந்த பிரதமர் மஹிந்தவின் செயலாளர் சிறிசேன அமரசேகரவை, அருகில் நின்ற சி.பி.இரத்நாயக்க உள்ளிட்ட மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதூக்கி எழுப்பி விட்டனர்.

இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும்  மஹிந்த  ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் புதிய பிரதமரின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில்
மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (31) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கான நேரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுக்கிக்கொடுத்துள்ளார்.

பிரதமர் மாற்றம்! சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்டமா அதிபர்


பிரதமர் மாற்றம்!
சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள 

சட்டமா அதிபர்

இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி மாற்றம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்ற கருத்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அதன் நியாயம் குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கடந்த 29ஆம் திகதியன்று சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே சட்டமா அதிபர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பின் கீழ் இந்த விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரான தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.



வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி


வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த
இலங்கை ரூபாயின் பெறுமதி


இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176 ரூபாயை கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டொலரின் விற்பனை விலை 176.2547 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.3605 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இந்தளவிற்கு விற்பனை மற்றும் கொள்வனவு விலை அதிகரித்த முதல் சந்தர்ப்பமாக இன்றைய தினம் கருதப்படுகின்றது.

நாணயம்
கொள்வனவு விலை (ரூபா)
விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
120.8896
126.1414
கனடா டொலர்
130.4879
135.4568
சீன யுவான்
20.0389
25.6280
யூரோ
194.2662
201.2831
ஜப்பான் யென்
1.5131
1.5700
சிங்கப்பூர் டொலர்
123.7786
128.0852
ஸ்ரேலிங் பவுண்
217.9461
225.2308
சுவிஸ் பிராங்க்
170.2156
176.7391
அமெரிக்க டொலர்
172.3605
176.2547