தபால் சேவகர்களிடம்
மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி
கட்டணங்களை செலுத்தலாம்





மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் தபால்சேவகரிடம் செலுத்தலாம் என தபால்மா அதிபர் ரோஹன அபயரட்ன தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதற்கமைய, ஆரம்பகட்டமாக தபாற்காரர் ஒருவர் நாளொன்றுக்கு ஆகக் கூடியது 20 ஆயிரம் ரூபாவரை மேற்படி கட்டணங்களுக்காக சேகரிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.  

வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டுகள் தபாற்காரர்களினால் விநியோகிக்கப்படும் அதேநேரம் தபாற்காரர்களால் சேகரிக்கப்படும் பணத்திற்கு உத்தரவாதமாக முழுமையாகக் காப்புறுதி அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,   தபாற்காரர்கள் தமது கடமை நேரத்தில் தபால் விநியோகத்திற்கு மேலதிகமாக வாடிக்கையாளர்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும் திணைக்களம் மற்றும் தபால் முகவர் நிலையங்களுக்கு ஆதாயம் தேடும் நோக்கிலுமே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உத்தேசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  
ஊவா மாகாணத்தில் பரீட்சார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டம் வெற்றியளித்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வென்றுள்ளது.   அதனைத் தொடர்ந்தே நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்தக் கோரி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top