Thursday, January 31, 2019

14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது


14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன்
குடும்பஸ்தர் ஒருவர் கைது

தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 கிலோ 690 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழி காட்டலில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு,அவரிடம் இருந்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் விசாரனைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா



இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு
புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா


காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 71 ஆவது தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.

தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான, ஒத்திகை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விருந்தினர்களின் பட்டியல்  அறிவிக்கப்பட்டது. அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்


மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான
ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்


மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தை வீதி, செங்கலடியை சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் என்ற 48 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இவர் இன்று காலை கடமைக்காக மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வீதியால் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சவூதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி


சவூதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி

வூதி அரேபியாவில் பெய்த கடுமையான மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து சவூதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், ''சவூதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக சவூதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 10 பேர் தபுக் நகரைச் சேர்ந்தவர்கள். கனமழையில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தபுக் நகரில் பல இடங்களில் ஓடும் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின்னர் மீட்புப் படையினர் மீட்டனர் என்று சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்பச் சலனம் காரணமாக பல நாடுகளில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களுக்குள் பெய்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடுகிறது. இம்மாதிரியான வானிலைத் தன்மை பாலைவன நாடுகளாக அடையாளப்படுத்தப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபகாலமாக  தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு கடந்த சனிக்கிழமையன்று, ஒரேநாளில் கொட்டித் தீர்த்தது. இதனால், தலைநகர் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

.







மலேசியாவின்16-வது மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்


மலேசியாவின்16-வது மன்னராக
முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்
    
மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார்.
மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் திகதி பதவி விலகினார்.
ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.
 இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் உள்ள மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.
அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, பஹாங் மாநிலத்தின் தலைவரான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), கடந்த 24-ம் திகதி புதிய மன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார்.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் புதிய மன்னர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது நாட்டின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார்.
இதேபோல் பெரேக் மாநில தலைவரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் மஹாதீர் முஹம்மது மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.









கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால் ‘கோப்பி கடை’ டிவி தொடரை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவு இந்திய ஊடகம் செய்தி வெளியீடு


கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால்
கோப்பி கடைடிவி தொடரை நிறுத்த
ஜனாதிபதி சிறிசேன உத்தரவு
இந்திய ஊடகம் செய்தி வெளியீடு
   



இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் அரசு தொலைக்காட்சியில்கோப்பி கடைஎன்ற பெயரில் சிங்கள தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில்கிராம சேவகருக்கு பைத்தியம்என்ற பெயரில் ஒரு பாகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கிராம சேவகருக்கு பைத்தியம் பிடித்து வாள் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த தொலைக்காட்சி தொடர் பற்றி அறிந்த ஜனாதிபதி சிறிசேனஉடனடியாக தொடரை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொடரின்கிராம சேவகருக்கு பைத்தியம்என்ற பெயரில் ஒளிபரப்பான பாகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது, ருசிகர தகவல் வெளியானது. ஜனாதிபதி சிறிசேன, ஆரம்பத்தில் பொலன்னறுவை கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றினார். அதுதான் அவரது முதலாவது அரசு பணியாகும். இதனால் தனது முதலாவது அரசு பணியை அவமதிக்கும் விதமாக டி.வி. தொடர் எடுக்கப்பட்டு இருந்ததால் அதை நிறுத்த உத்தரவிட்டதாக தெரிய வந்தது.
கோப்பி கடை என்ற சிங்கள தொடர் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 6 இற்கு மாணவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பில் ரூபா 5,000 பணத்தை இலஞ்சமாக பெற்ற வேளையில், ஹொரவப்பொத்தானை, ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கு ரூபா 10,000 இலஞ்சமாக கோரிய நிலையில், அதில் ரூபா 5,000 இனை குறித்த மாணவனின் தந்தையிடம் முற்பணமாக பெற்ற வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம். நிசாம் நியமனம்


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக
எம்.டி.எம்நிசாம் நியமனம்



கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமணம் மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்..எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்


பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும
இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்



மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அஜித் மானப்பெரும ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (31) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் சுற்றாடல் பிரதியமைச்சராகக கடமையாற்றி வந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 30, 2019

ஊழல் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 89-வது இடம்


ஊழல் நாடுகள் பட்டியலில்
இலங்கைக்கு 89-வது இடம்



2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இலங்கை 89-வது இடத்தில் உள்ளது.
2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
180 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் இலங்கை 89-வது இடத்தில் உள்ளது. 

அதே நேரத்தில் அண்டை நாடான இந்தியா 78-வது இடத்தில் உள்ளது. மற்றொரு பக்கத்து நாடான பாகிஸ்தான் 117-வது இடம் பிடித்துள்ளது.
ஊழல் மிக குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் நியூசிலாந்துகள் முதல் 2 இடங்களில் உள்ளன. சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன.

'குஷ்' எனும் போதைப் பொருளுடன் ஈரான் யுவதி இன்று அதிகாலை கைது!


'குஷ்' எனும் போதைப் பொருளுடன்
ஈரான் யுவதி இன்று அதிகாலை கைது!

'குஷ்' (KUSH) எனும் 400கிராம் கஞ்சா வகை போதை பொருளுடன் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) அதிகாலை கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் வந்த, ஈரான் பெண் (24) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை சோதனையிட்டபோது, அவரது பயணப்பொதியின் அடியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த போதை பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.




யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்! வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பு


யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்! வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்
காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பு

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 24ஆம் விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார்.

அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

எனினும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை அழைத்துச் சென்றனர். இந்த நிலையிலேயே அந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.






மூன்று கிலோ ஹெரோயினுடன் கொழும்பில் சிக்கிய தம்பதி!


மூன்று கிலோ ஹெரோயினுடன்
கொழும்பில் சிக்கிய தம்பதி!



கொழும்பில் பெருந்தொகை பெறுமதியான ஹெரோயினை வைத்திருந்த கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஹெரோயினை பெறுமதி 36 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கணவன் களனி ஊழல் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை கிரிபத்கொட, ஈரியவெட்டிய வீதி பிரதேசத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ கிராம் நிறைக்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர்களான இந்த தம்பதியினால் பல்வேறு பெயர்களின் ஹெரோயின் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
இந்த பெயர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸாரினால் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் தெஹிவளையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையுடன் இந்த தம்பதிக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.