Saturday, August 31, 2019

உங்கள் பெயரும் 2019 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்த்துக்கொள்ளுங்கள்


உங்கள் பெயரும் 2019 ஆண்டுக்கான
வாக்காளர் பட்டியலில் உள்ளதா?
சரி பார்த்துக்கொள்ளுங்கள்

புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.
2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலுள்ள உங்கள் தகவல்கள் சரியாக உள்ளதா என்பது தொடர்பில் சரி பார்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய வாக்காளர் இடாப்பு நாடு முழுவதும் உள்ள கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சரிப்பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தேர்தல் செயலக அலுவலகத்தில் உள்ள இணையத்தளத்தில் இதுவரையில் வாக்காளர்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் பெயர் விபரங்களை பரிசோதித்துப் பார்ப்பதற்கு https://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx இங்கே அழுத்தவும்.




ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? மற்றுமொரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது


ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?
மற்றுமொரு கருத்துக்கணிப்பு 
முடிவுகள் வெளியானது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? வெற்றிபெறுவார் என்பது குறித்து Green University மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் குறைந்த வாக்குகளையே பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச 17 வீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என அந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

900 மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்ஸ 59 வீதமான வாக்குகளை பெற்றுள்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துகணிப்பின் முடிவுகளும் வெளியாகியிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை தோற்கடிக்க முடியுமான ஒரேயொரு வேட்பாளர் சபாநாயகர் தேசபந்து கரு ஜெயசூர்யவே என்று பேராதனை பல்கலைக்கழகம் செய்த மக்கள் கருத்துக் கணிப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கணிப்பீட்டில் கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டு இந்த கணிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய நாடு, இனம் மற்றும் மதம் ஆகிய உணர்வு கொண்ட மற்றும் அவை குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய சிரேஷ்ட அனுபவம் கொண்ட ஒரே ஒருவர் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவே என்று கணிப்பீட்டில் தெரிவந்துள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கினால் அதன் இலாபம் கோட்டாபய ராஜபக்ஸவை விடவும் ஜே.வி.பி யின் அனுர குமார திஸாநாயக்கவுக்கே சேரும் என்று அந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளது




நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்


நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக
முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரி
நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பரந்துபட்ட அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள், குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் இன்று ஆரம்பமானது. இதன்மற்றுமொரு கட்ட அபிவிருத்தி நடவடிக்கையாக தொழில்நுட்க கல்வியல் கல்லூரிக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்வியில் நவீன மய நடவடிககையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள்.

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார். நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. மூன்றாவது பல்கலைக்கழகம் விரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில் இந்த தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியில் நான்கு வருடப் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கப்படும். கொரியாவின் கொய்க்கா நிறுவனம் இதற்காக இரண்டாயிரத்து 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சு இதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.





கல்முனைப் பிரதேசத்தில் அதிகளவில் பிடிக்கப்பட்ட பாரைக்குட்டி மீன்கள்



கல்முனைப் பிரதேசத்தில்
அதிகளவில் பிடிக்கப்பட்ட
பாரைக்குட்டி மீன்கள்

இன்று (31) கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் அதிகளவான பாரைக்குட்டி மீன்கள் சிக்கியுள்ளன.

இம்மீன்கள் சந்தையில் ஒரு கிலோ 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.











கோட்டாபயவை சந்தித்த ரவூப் ஹக்கீம்.


கோட்டாபயவை சந்தித்த வூப் ஹக்கீம்.




சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்வை, கொழும்பில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

தனது புதல்வியின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக அமைச்சர் ஹக்கீம், கோத்தபாயவின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமணம் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்வின் திருமணமும் நடைபெறவுள்ளது.

இதனால், 17ஆம் திகதி திருமணத்திற்கு தன்னால் வர முடியாது என தெரிவித்துள்ள கோத்தபாய, இரண்டாம் நாள் வைபவத்தில் கலந்துக்கெள்வதாக கூறியுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமும், கோத்தபாய ராஜபக்வும் சிறிது நேரம் நட்புறவாக கலந்துரையாடியுள்ளனர். எந்த விடயங்கள் குறித்து பேசினர் என்ற தகவல் வெளியாகவில்லை.


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹங்கம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு
எதிராக அஹங்கம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

அஹங்கம பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஹங்கம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் பாடசாலை ஒன்றை திறப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான ஆகியோர் வரவிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வருகைக்கு எதிராக பிரதேசவாசிகள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர் எனக் கூறப்படுகின்றது..

ஆர்ப்பாட்டக்காரர்கள் அஹங்கம நகரில் இருந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான பதாதைகளுடன் ஹோட்டல் பாடசாலை அமைந்துள்ள இடத்தை நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹோட்டல் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த வைபவத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




Friday, August 30, 2019

இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து முஸ்லிம் சமூகம் எதைத்தான் சொல்ல


இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து
முஸ்லிம் சமூகம்
எதைத்தான் சொல்ல


கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பாரிய பிரச்சினைகளின்போது இவர் எங்கே போய்விட்டார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..  
நீதிமன்றத்திற்கு போகவேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு எத்தனையோ இருக்கின்றது.தற்கெல்லாம்  இல்லாத இந்த சட்டத்தரணி ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லப்போகின்றாராம்.
இவரின் இந்த ஆர்வத்தைப் பார்த்து முஸ்லிம் சமூகம் எதைத்தான் சொல்ல முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக 9ஆவது பட்டமளிப்பு விழா இன்று பதினொரு பயிற்சி நெறிகளை சேர்ந்த 483 பேர் பட்டம் பெறுகின்றனர்


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக
9ஆவது பட்டமளிப்பு விழா இன்று
பதினொரு பயிற்சி நெறிகளை சேர்ந்த
483 பேர் பட்டம் பெறுகின்றனர்

இலங்கையின் 14வது தேசியப் பல்கலைக்கழகமாக 2005ஆம் ஆண்டு பதுளையில் ஆரம்பிக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தனது 9வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று 31ம் திகதி சனிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மாகம் றுகுணுபுர சர்வதேச மாநாட்டு மையத்தில் மாலை 2 மணிக்கு துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெறுகிறது.

 பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கி வைப்பார். முதன்மை விருந்தினராக இலங்கையின் முன்னணி முயற்சியாண்மையாளரான றைகம் கம்பனிகளின் நிறுவுனர் கலாநிதி ரவி லியனகே கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

ஊவா மாகாணத்தின் தலைநகரான பதுளை நகரில் எழில்மிக்க மலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகமானது இலங்கையில் காணப்படும் ஏனைய பல்கலைக்கழகங்களின் பாரம்பரிய கல்வி மற்றும் கல்விசார் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டுத் திகழ்கின்றது. தொழிற் சந்தைக்கு ஏற்ப தனித்துவமான பாணியில் முயற்சியாண்மையை மையக் கருவாக் கொண்டு இலங்கை மற்றும் உலகளாவிய வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும் வகையிலமைந்த கற்கைநெறிகள், அத்தியாவசிய மென்திறன்கள் மற்றும் பரந்த பொதுப் பாடத்திட்டங்களைத் தனது ஒவ்வோர் பட்டப்பயில்நெறியின் கலைத்திட்டத்திலும் கொண்டுள்ளது.

முயற்சியாண்மையும் முகாமைத்துவமும், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம், விலங்கு விஞ்ஞானம், நீர்வாழ் வளங்களும் தொழில்நுட்பமும், ஏற்றுமதி விவசாயம், தேயிலை தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும், பனை இனத்தாவரம் மற்றும் இறப்பர் பால் தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும், கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்பயில்நெறிகள் முகாமைத்துவ பீடம், விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், மற்றும் தொழில்நுட்பக் கற்றைகள் பீடம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டுவருகின்றன.

முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞானம் பீடம், விலங்கு விஞ்ஞானம் மற்றும் ஏற்றுமதி விவசாய பீடம் ஆகிய பீடங்களின் 11 பயில்நெறிகளைச் சேர்ந்த 483 பட்டதாரிகள் தமது பட்டங்களை பெற உள்ளனர்.





வாரத்தில் ஒரு நாள் “பதிக்” ஆடை அணிவது கட்டாயம் ; அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கோரிக்கை


வாரத்தில் ஒரு நாள்பதிக்
ஆடை அணிவது கட்டாயம் ;
அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கோரிக்கை



வாரத்தில் ஒரு நாள் இலங்கையர்கள் அனைவரும்  பதிக்ஆடை அணிவதை சட்டமாக்க அமைச்சரவை பத்திரம் சமர்பிக்குமாறு பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அமைச்சர் தயா கமகே முன்வைத்துள்ளார்.

வாரத்தில் ஒரு நாள் இலங்கையர்கள் அனைவரும்  பதிக்ஆடை அணிவதை சட்டமாக்க அமைச்சரவை பத்திரம் சமர்பிக்குமாறு தான்  பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்ததாக அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.


உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு
எதிர்ப்பு தெரிவித்து  மட்டக்களப்பில் போராட்டம்





மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடத்தினர்.

கடந்த 27ஆம் திகதி இரவு கல்லடி பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் தாக்கப்பட்டதற்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவை, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தின் குரல்வளையினை நசுக்காதே, தாக்காதே,

மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே,வேண்டும் வேண்டும் நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.