சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு

 அமோக வெற்றி - ஆசனங்கள் 145

ஓன்பதாவது பாராளுமன்றத்துக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த கட்சிக்கு தேர்தலில் 6,853,690 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கமைவாக சிறிலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு மொத்த வாக்குகளின் அடிப்படையில் 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக இந்த கட்சிக்கான மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145 ஆகும்.

 

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை அமைத்து தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி 2,771,980 வாக்குகளைப் பெற்று 47 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்த கட்சிக்கும் தேசிய பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து இக்கட்சிக்கு மொத்தமாக 54 ஆசனங்கள் உரித்தாகின்றது.

 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளது. இந்த கட்சி 249435 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது.

 

இதேவேளை இந்த தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 327168 வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தேசியப்பட்டியலில் 1 ஆசனம் கிடைத்ததினால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு மொத்தமாக 445958 வாக்குகளை பெற்ற போதிலும் அதற்கு 2 ஆசனங்களே கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய பட்டியலில் 1 ஆசனம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக இந்த கட்சியின் ஆசன எண்ணிக்கை 3 அகும்.

 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 61464 ஆகும். இதற்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67692 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது. சிறிலங்கா சுதந்திர கட்சி 66579 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. முஸ்லிம் தேசிய முன்னணி 55981 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 51301 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்ககளைப் பெற்றது. இதற்கு 1 ஆசனம் கிடைத்துள்ளது. தேசிய காங்கிரஸ் 39272 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எங்கள் மக்கள் சக்தி 67758 வாக்குகளை பெற்று 1 தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top