கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு 'பீ' அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பார்த்த போது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அளவுக்கு அச்சுறுத்தும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் இன்று இடையீட்டு மனு ஊடாக புதிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்ட
ஒரு விடயமேனும் இதில் கூறப்படவில்லை. இது ஏன் என்று கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல நேற்று திறந்த நீதிமன்றில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் இடம்பெறும் விடயங்களையோ தற்போது நிலவும் நிலைமையையோ கருத்தில் கொண்டு என்னால் தீர்மானம் எடுக்க முடியாது. நீதிமன்றில்
சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களுக்கு
அமையவே நான் தீர்மானிக்க முடியும். நாட்டில் இடம்பெறும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் பொலிரின் அறிக்கையைக்
கொண்டே நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கும். எனவே பொலிஸார் அது தொடர்பில் மிக தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒருவருக்கு ஏன் பிணை அளித்தீர்கள்
என பொது மக்கள் நீதிமன்றை தூற்றுவார்கள்.
பொலிஸாரின் நடவடிக்கையால்
நீதிமன்றமே தலைகுனிவை சந்திக்கும். பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மிகவும் கவலையடைகின்றேன்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலான 73854 எனும் இலக்கத்தைக் கொண்ட வழக்கு விசாரணையின் போதே பொலிஸார் சார்பில் ஆஜரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவிடம்
கேள்விக் கணைகளை தொடுத்தவாறு நீதிவான் இவ்வாறு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஞானசார தேரர் மீது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன்னதாக நீதிவானுக்கு பொலிஸார் அறிக்கை சமர்பித்திருந்தனர். அந்த அறிக்கை நேற்று பொலிஸாரால் இடையீட்டு மனுவொன்றினூடாக வலுவிழக்கச்
செய்யப்பட்டு புதிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று புது அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
முன்னதாக சமர்பிக்கப்பட்ட
அறிக்கையானது பாதுகாப்பாக
எவரும் பார்வையிட முடியாதவாறு அப்போதிலிருந்து நீதிவானால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றைய வழக்கு விசாரணையின்
இடைநடுவே நீதிவான் தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ஞானசார தேரருக்கு பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்பிட்ட
நிலையில் நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல பின்வருமாறு கேள்விக் கணைகளை தொடுத்தார்.
இதற்கு முன்னர் ஒரு 'பீ' அறிக்கையை என்னிடம் தாககல் செய்தீர்கள். இரகசிய அறிக்கை என கூறினீர்கள்.
அதனால் அதனை பெட்டகத்தில் வைத்து நான் பாதுகாத்தேன். ஐ.சீ.சீ.பி.ஆர். சட்டத்தின் கீழ் அதில் குற்றச்¬சாட்டுக்கள் இருந்தன. அதனை வாசித்தபோது அதன் பாரதூரத்தை என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது. நாடே பற்றி எரியும் வகையில் அதன் தன்யை நான் உணர்ந்தேன்.
எனினும் இன்று ( நேற்று ) புதிய 'பீ' அறிக்கையை சமர்பித்தீர்கள்.
அதில் முதல் 'பீ' அறிக்கையில் குறிப்பிட்ட
ஒரு விடயம் ஏனும் இல்லை. ஏன் இந்த இரண்டு வேஷங்கள் என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
கனம் நீதிவான் அவர்களே, உண்மையில் முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் சட்டப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் கலந்துரையாடிய பின்னரேயே நாம் இந்த புதிய அறிக்கையை சமர்பித்தோம் என்றார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல,
ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீங்கள் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.
சாதாரண ஒருவர் தொடர்பில் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வீர்களா?
குற்றம் இடம்பெற்ற இடத்தை பார்வை இடச் சென்றவரைக் கூட நீங்கள் கைது செய்து பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டே ஆஜர் செய்வீர்கள்.
இந்த வழக்கில் முதலில் நீங்கள் தாக்கல் செய்த 'பீ' அறிக்கையில்
குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் பிணை வழங்க முடியாத மிகப் பாரதூரமான குற்றங்கள் உள்ளடங்கியிருந்தன. ஏன் அதில் உள்ள ஒன்றுகூட இந்த அறிக்கையில் இல்லை. அவற்றுக்கு சாட்சிகள் இல்லையா. இல்லை எனில் ஏன் அப்படி ஒரு 'பீ' அறிக்கையை சமர்பித்தீர்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு என்னை எழுப்பி நீங்கள் அவசர விடயம், அபாயகரமான விடயம் எனக் கூறித்தானே அந்த பீ அறிக்கையை சமர்பித்தீர்கள்.
உங்களில் ஒருவரின் தொப்பியை கழற்றியதாகவும் சீருடையைப் பிடித்து இழுத்ததாகவும் தள்ளிவிட்டதாகவும் நீங்கள் தானே கூறினீர்கள். ஏன் அது ஒன்றும் இந்த புதிய பீ அறிக்கையில் இல்லை.
அந்த பீ அறிக்கையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை பார்த்தபோது நாடே கொளுந்துவிட்டு எரியும் அபாயம் காணப்பட்டது என கூறினார்.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
நீதிவான் அவர்களே, இந்த விசாரணை ஆரம்பத்தில் நான் அதற்கு பொறுப்பான கடமையில் இல்லை. நான் குற்றங்கள் தொடர்பிலான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையைப் பொறுப்பேற்ற
பிறகு விசாரணைகள் மிக ஆழமாக என் ஆலோசனைப்படி முன்னெடுக்கப்பட்டன என்றார்.
இந் நிலையில் ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் குற்றச்சாட்டுக்களை கமல் சில்வா மன்றில் பிரஸ்தாபித்த நிலையில், நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல மீளவும் திறந்த மன்றில் கருத்துக்களை தெரிவித்தார்.
நீங்கள் முதல் பீ அறிக்கையில்
தெரிவித்த விடயங்களால்
அதனை பாதுகாப்பாக
வைக்க வேண்டும் என கூறினீர்கள். அதனால் இதுவரை அது என் கைகளிலேயே இருந்தது. வீட்டில் கூட யாரும் பார்த்துவிடக்
கூடாது என்பதில் நான் அவதானமாக இருந்தேன். அப்படியாயின் நீங்கள் அதில் கூறியுள்ள குற்றங்கள் எதனையும் சந்தேகநபர் புரியவில்லையா? ஏன் அதில் அவ்வாறு குறிப்பிட்டீர்கள் ? என நீதிவான் மீள கேள்வி எழுப்பினார்.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, இல்லை. சந்தேக நபர் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை புரிந்தார் தான் என்றார்.
அப்படியானால் ஏன் அவற்றை வாபஸ் பெற்றீர்கள்
என நீதிவான் மீள கேட்டார்.
அவசரமாக இந்த பிரச்சினையை தீர்த்து சந்தேகநபருக்கு
எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றினை தாக்கல் செய்யவே இந்த நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பதிலளித்தார்.
பொலிஸாராகிய
உங்களது நடவடிக்கைகள்
கவலையளிக்கின்றன. சந்தேக நபருக்கு பிணை மறுக்க எந்த காரணமும் உங்களால் முன்வைக்கப்படவில்லை. பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டுக்கள் மீளப் பெறப்பட்டுள்ளன
என கூறி நீதிவான் பிணை அனுமதி வழங்கினார்.
அத்துடன் பொலிஸாரின் சீருடையை கழற்றுவதாகவும் முஸ்லிம் குடும்பங்களை கொலை செய்வதாகவும்
பொலிஸ் வாகனத்தை தீயிட்டு கொழுத்துவதாகவும் கூறிய எந்த விடயமும் புதிய அறிக்கையில் இல்லை என சுட்டிக்காட்டிய நீதிவான், நாட்டில் என்ன நடந்த போதும் நீதிமன்றில் முன்வைக்கப்படும்
கருத்துக்களை மட்டும் மையப்டுத்தியே தன்னால் தீர்மானிக்க
முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
பொலிஸாராகிய உங்கள் நடவடிக்கை காரணமாக நீதிமன்றையே பொது மக்கள் குறை கூறுவர். இவர் போன்ற ஒருவருக்கு ஏன் பிணை வழங்கினீர்கள்
என பொது மக்கள் கேட்பார்கள் என சுட்டிக்காட்டிய நீதிவான், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன் போது ஞானசார தேரர் பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவொன்றை
பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிவானைக் கோரினர்.
இதன்போது, அவர் தானாக விசாரனைக்கு வந்து ஆஜராகியுள்ளார் என நீங்கள் தானே கூறினீர்கள். அப்படியானால்
அவர் ஒத்துழைப்பு
வழங்கியுள்ள நிலையில் அப்படியான உத்தரவு தேவையற்றது என அறிவித்து அதனை நீதிவான் நிராகரித்தார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
நன்றி: வீரகேசரி
0 comments:
Post a Comment