மருத்துவமனை தீ விபத்தில்
கொரோனா நோயாளிகள் 64 பேர் பலி:
100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈராக் நாட்டில் அனர்த்தம் (படங்கள்)
-----------------------------------------------------------
ஈராக் நாட்டில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நசிரியா நகரில் உள்ள அல் ஹூசைன் பயிற்சி மருத்துவமனையில் கடந்த 3 மாதத்திற்கு முன் புதிதாக கொரோனா விடுதி கட்டப்பட்டது. இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பயங்கர வெடிச்சத்தத்துடன் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அலறி அடித்து ஓடினர். நள்ளிரவு நேரம் என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பலரும் தீயில் கருகினர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
தீ விபத்தில் கட்டிடம் இடிந்தது, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 64 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை இடிபாடுகள் இடையே உறவினர்கள் கதறி அழுதபடி தேடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகளும், மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறியிருக்கின்றனர். அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
ஈராக்கில் ஏற்கனவே மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு கொடுத்த விலை தான் இந்த தீ விபத்து என உறவினர்களை பறிகொடுத்தவர்கள் சொல்லி கதறுகின்றனர்.
தீ விபத்திற்கு காரணமான பிரதேசத்தில் உள்ள மாவட்ட சுகாதார இயக்குநர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் பாக்தாத்தில் ஆக்சிஜன் தொட்டி வெடித்து 82 நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment