சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் புதிய சட்டம் கோயிலில் இருந்து

5 கிமீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை:

மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டன
------------------------------------------------------------------
எமது அண்டை நாடான இந்தியாவில், அசாம் மாநிலத்தில் கோயில்களில் இருந்து 5 கிமீ சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறினால் 3 வருட சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் இச்சட்டம் சர்ச்சையாகி உள்ளது.
அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சமீபத்தில் இம்மாநில சட்டப்பேரவையில் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு மானியங்களை ரத்து செய்யும் இந்த மசோதா பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்த கட்டமாக கால்நடைகளை பாதுகாப்பதற்கான புதிய மசோதா சர்ச்சையாகி உள்ளது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி,
* இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.
* கோயிலின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
* முறையான ஆவணங்கள் இன்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், அசாமுக்கு வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது சட்டவிரோதமாகும்.
* இந்த புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது. இந்த குற்றத்திற்கு 3 வருடம் சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
* புதிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தண்டனை இரண்டு மடங்காகும்.
* ‘கால்நடைகள்’ என்றால் காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகள் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மசோதா இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள போதிலும், எதிலும் இதுபோல் குறிப்பிட்ட பகுதியில் தடை விதிக்கும் அம்சங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* காங்கிரஸ் கண்டனம்
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் தேபாபரதா சைகியா கூறுகையில்,
‘‘இது மாநிலத்தில் மதப் பிரச்னையை ஏற்படுத்தும் சட்டம். மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க, எங்கு வேண்டுமானாலும் சிறு கோயிலை வைத்து சட்டம் பேசுவார்கள். இதனால் வன்முறைகள்தான் வெடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top