ஸாஹிறாக் கல்லூரி
சாய்ந்தமருதில்
உருவாக்கப்பட்ட வரலாறு ....
சுமார் 71 வருடத்திற்கு முந்திய அதாவது 1948 ஆண்டு நவம்பர்
மாதம் 16 ஆம் திகதியன்று சாய்ந்தமருதிலுள்ள 60’X20’ ஒரு ஓலைக்
கொட்டிலில் Junior English School என்ற பெயரில் தோற்றம் பெற்றதுதான் இந்த ஸாஹிறாக் கல்லூரி.
மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களே இக்கல்லூரியின் ஸ்தாபகர் ஆவார்.
1947ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தேர்தல்
தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கேற்முதலியார்
காரியப்பர் அவர்கள் முதல் வேலையாக Junior English School ஐ அமைக்கும் முயற்சியில்
அன்று முழு மூச்சுடன் இறங்கினார்.
அச்சமயம் நாட்டின் கல்வி
அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மேஜர் ஈ.ஏ.நுகேவெல அவர்களிடம் Junior English School அமைத்துத் தரும்படியும் இதற்காக
இப்பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிடுமாறும்
முதலியார் காரியப்பர் வேண்டினார்.
இதன்படி
1948 ஆம் ஆண்டு கல்வியமைச்சர் மேஜர்
ஈ.ஏ.நுகேவெல அவர்கள் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள்,
கிழக்கு மாகாண கல்வி அதிகாரி எஸ்.வி சோமசேகரம்
ஆகியோருடன் முதற் தடவையாக இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சருக்கும் அவரோடு விஜயம் செய்த கல்வி அதிகாரிகளுக்கும்
1948ஆம் ஆண்டில் பெரு வரவேற்பளிக்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது அமைச்சர் மேஜர் ஈ.ஏ.நுகேவெல காணி மற்றும்
தற்காலிகமான ஒரு கட்டட வசதியை ஏற்படுத்தித் தந்தால் Junior
English School ஐ அமைத்துத்
தருவதாக உறுதி அளித்தார்.
உடனே முதலியார் காரியப்பர்
தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பை முற்றிலும் இலவசமாக
எழுதிக் கையளித்தார். எனினும் காலம் கடந்தும் Junior
English School அமைக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்படவில்லை.
1948 ஆம் ஆண்டு ஜூலை
மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு –
செலவுத்திட்ட விவாதத்தில் முதலியார் காரியப்பர் அவர்கள் தனது அமைச்சு
பற்றிய விவாதத்தை ஆரம்பித்து உரை நிகழ்த்துவதற்கு முன் தனது பகுதியில் Junior
English School களை அமைத்துத்
தருவதாக கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதன் பயனாக முதலியார் காரியப்பரால்
வழங்கப்பட்ட காணியில் பொதுமக்களால் 60’X20’ அளவில் கிடுகுகளால் அடைக்கப்பட்ட ஒரு
ஓலைக் கொட்டில் அமைக்கப்பட்டது. இக்கொட்டகையிலேயே
1949.11.16 ஆம் திகதி கொழும்பு வித்தியாபதி கே.எஸ்.அருள்நந்தி, கிழக்குமாகாண கல்வி
அதிகாரி எஸ்.ஜே. குணசேகரம், வித்தியாதரிசி எஸ்.விஸ்வலிங்கம், முதலியார் காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில் Junior English School
சம்பிரதாயபூர்வமாக சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் தமிழ் மொழி மூலம் 5ஆம் தரம் சித்தியடைந்த 4 மாணவர்களுடன் ஆங்கில மொழி பாடசாலையாக
இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது. அன்றைய காலத்தில் எம்.ஐ. அப்துல் காதர் பதில் அதிபராக இப்பாடசாலையில் கடமையாற்றினார்.
4 மாணவர்களுடன் இயங்க
ஆரம்பித்த இந்த பாடசாலை நிரந்தர அதிபர் ஒருவர் இன்றி பதின்மூன்றரை மாதங்கள் இயங்கியது.எம்.ஐ.அப்துல் காதர் அதிபர் அல்லது
எம்.எம்.இப்றாஹீம் அதிபர் அல்லது பொன்னப்பா அதிபர் ஆகியோரால்
காலத்திற்கு காலம் அதிபருக்குரிய கடமைகள் ஆற்றப்பட்டு வந்தன.
இதன் பின்னர் திஹாரியிலிருந்து
எம்.ஏ. மீராலெவ்வை அதிபர்
இப்பிரதேசத்திற்கு வருகைதந்து இப்பாடசாலையில் 1951.01.01 ஆம் திகதி அதிபராகப்
பொறுப்பேற்றார். 1953ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசாங்கத்தின் கல்விக்
கொள்கைக்கு அமைய இப்பாடசாலை ஆங்கில மொழி பாடசாலையிலிருந்து தமிழ் மொழி பாடசாலையாக மாற்றமடைந்தது.
இதற்குப் பிறகு பாடசாலையில் மாணவர்கள், ஆசிரியர்கள்
தொகை மேலும் அதிகரித்தது. பெளதிக வளங்களும் கூடின.
1949ல் ஆங்கில மொழி
பாடசாலையாக ஆரம்பித்து பின்னர் சீனியர் ஸ்கூல் ஆக மாற்றம் பெற்று அதன் பின்னர் மஹாவித்தியாலயமாகத்
தரமுயர்ந்து இன்று இப்பாடசாலை தேசிய பாடசாலையாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
கல்லூரியின் ஸ்தாபகர்கள்
கல்லூரியின் ஸ்தாபகர்கள்
எம்.எஸ்.காரரியப்பர்
எம்.சி.ஏ.ஹமீட் (அதிபர்)
எம்.வை.ஹமீது உடையார்(கிராம சபை தலைவர்)
எம்.ஏ.கபூர் மரைக்காயர்
பீ.எம்.மீராசாய்வு பயில்வான்
எம்.ஐ.அஹமதுலெவ்வை இராசாப்போடியார்
ஓ.எம்.அலியார்
எம்.எம்.ஆதம்பாவா சேர்மன்
ஐ.எம்.ஏ.ஐயூப் அதிபர்
முஹம்மது கனி வைத்தியர்
யூ.எம்.இப்றாஹிம்லெவ்வை
இப்றாலெவ்வ மரைக்காயர்
நைனா முஹம்மது
பீ.எம்.மக்பூல் ஆலிம்
முஹம்மது காசீம்
ஏ.எம்.சரீப் விதானை
கோ.அஹமதுலெவ்வை மரைக்காயர்
எம்.எச்.எம்.ஹனிபா வ.வி
இவர்கள் அனைவரும் வபாத்தாகி விட்டார்கள்.
ஸாஹிறாக் கல்லூரியின் வைர விழா நிகழ்வின் போது மர்ஹும்
அல்-ஹாஜ் எம்.சீ.ஏ. ஹமீது அதிபர் அவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து....
-
ஏ.எல் ஜுனைதீன்
ஊடகவியலாளர்.
-
0 comments:
Post a Comment