தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை
ஆயிரமாக அதிகரிக்கத் திட்டம்.


தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கப்படவிருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சகல வசதிகளையும் கொண்ட 3 பாடசாலைகள் வீதம் அபிவிருத்தி செய்து அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதன் மூலம் நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

தற்போது நாடு தழுவிய ரீதியில் 374 தேசிய பாடசாலைகள் உள்ளன. நாட்டில் 330 பிரதேச செயலக பிரிவுகள் உள்ளபோதும் அவற்றில் 124 பிரிவுகளில் தேசிய பாடசாலைகள் இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலக பிரிவுகளில் 37 தேசிய பாடசாலைகள் மாத்திரமே உண்டு என்றும், இப்பாடசாலைகள் அமைக்கப்பட்ட முறைமை அசாதாரணமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான இலக்கு என்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்பொழுது நாட்டில் 10,175 பாடசாலைகள் செயற்படுகின்றன. இருப்பினும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 374 ஆகும் என்றும் கூறினார். இதேபோன்று 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 124 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தேசிய பாடசாலைகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் பின்வருமாறு:
02. பாடசாலை கட்டமைப்புக்குள் ஆயிரம் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையிலும் புதிய மும்மொழி பாடசாலையை அமைத்தல்
இலவசமான, நீதியான மற்றும் தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் நோக்காக கொண்டு அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் சகல வசதிகளைக்கொண்ட மூன்று பாடசாலைகளை அபிவிருத்தி செய்து அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து மாவட்டங்களுக்கும் மும்மொழியை கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலைகள் வீதம் ஆரம்பிப்பதற்கும் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறான இருபது பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top