புதுவை பல்கலை. பட்டமளிப்பு விழாவில்

பதக்கம் வாங்க மறுத்த முஸ்லிம் மாணவி


இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்குபற்றிய பட்டமளிப்பு விழாவில் திடீரென வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மாணவி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது, இதில் 205 பேருக்கு முனைவர் பட்டமும், 17 பேருக்கு தங்கப் பதக்கமும் குடியரசு தலைவர் வழங்குவதாக இருந்தது.

பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் வருகையின் போது, பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து தங்கப்பதக்கம் பெற இருந்த ரபிஹா என்ற முஸ்லிம் மாணவியை காவல்துறையினர் அரங்கத்தின் வெளியே அழைத்து, பின்னர் குடியரசு தலைவர் சென்ற பிறகு அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரபிஹா தனது தங்கப் பதக்கத்தை விழா மேடையில் வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டமளிப்பு விழாவில் பங்குபெறும் மாணவர்கள், பேராசிரியர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டும், விழாவில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்,

மேலும், புதுச்சேரியில் குடியரசு தலைவர் வருகையையொட்டி, புதுச்சேரி முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக வன்முறைகளும் போராட்டங்களும் நடைபெறாமல் இருக்க தீவிரமாக கண்காணித்தனர்.

குடியரசு தலைவர் வருகையின் போது வெளியேற்றப்பட்ட மாணவி ரபிஹா நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், " பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் வருகைக்கு சற்று முன்னர் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் பேசவேண்டும் என்று கூறி பட்டமளிப்பு அரங்குக்கு வெளியே அழைத்தனர்.''

''பின்னர் என்னை கொஞ்சம் காத்திருக்க சொல்லிவிட்டு அவர்கள் அரங்கின் கதவுகளை அடைத்துவிட்டனர். அதன் பிறகு குடியரசு தலைவர் அரங்கைவிட்டு சென்ற பின்னரே என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர். என்னை என்ன காரணத்திற்காக வெளியே அழைத்தனர் என்பது எனக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.

''ஆனால் இது எனக்கு இந்த நாளில் ஒரு தைரியத்தை கொடுத்தது, இருந்தாலும் எந்த பாகுபாட்டின் அடிப்படையில் என்னை வெளியேற்றினர் என்பது புரியவில்லை. அதனால் இதை எதிர்த்தும் மேலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்தும், உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தான் நான் இந்த தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தேன்," என தெரிவித்துள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top