அபுதாபியில் கொரோனா சிகிச்சைக்காக
 10 ஆயிரம் பேர் தங்கும் வசதியுடன்
 புதிய மருத்துவ வளாகம் திறப்பு
  
அபுதாபியில் அரசு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 10 ஆயிரம் பேர் தங்கும் வசதியுடன் கூடிய புதிய மருத்துவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த மே மாதம் அல் ரசீன் என்ற பகுதியில் தொழிலாளர்களின் சிகிச்சைக்காக புதிய மருத்துவ வளாகம் ஏற்படுத்தப்பட்டு வந்தது.

இந்த பகுதியில் தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வந்ததாலும், சுகாதாரத்துறை ஆஸ்பத்திரிகளில் ஏற்பட்டுள்ள இடவசதி தட்டுப்பாடு காரணமாகவும் இந்த புதிய மருத்துவ வளாகம் ஏற்படுத்தப்பட்டது. 9 நாட்களில் 45 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் கொரோனா சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன் இந்த மருத்துவ வளாகமானது கட்டப்பட்டது.

தற்போது இந்த மருத்துவ வளாகத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 784 பெரிய அரங்கம் போன்ற அறைகள் உள்ளது. இதில் மொத்தம் 10 ஆயிரம் நோயாளிகள் தங்கும் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வளாகம் தற்போது நேற்று முதல் திறக்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அபுதாபி அரசு சுகாதாரத்துறை ஆஸ்பத்திரிகளில் இருந்து இடவசதி இல்லாமல் உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அறிகுறிகள் ஏற்பட்டு குவாரண்டைன் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவோர் இந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதில் 225 தீவிர சிகிச்சைக்கான படுக்கை வசதியும் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவ பரிசோதனை அறைகள், எக்ஸ்-ரே அறைகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்கு, கழிவறைகள், உணவு பொருட்கள் வைக்கும் அறைகள் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் தற்போது 50 டாக்டர்கள், 80 நர்சுகள், 50 நிர்வாக அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுபற்றி அமீரக மத்திய தேசிய கவுன்சில் விவகாரத்துறைக்கான மந்திரி அல் கமாலி கூறும்போது, இங்கு நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் சேவைகளும் செய்துதரப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து நோயாளிகளுக்கும 3 வேளை உணவு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top