அரசு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்தும்
விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட
600 முஸ்லிம் பொலிஸ்காரர்கள்!
இன்று11 ஆம் திகதி 30 வருடங்கள்!!



கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலயங்கள் கடந்த 1990.06.11 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது அன்றிருந்த அரசின் மேலிடத்து உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம் வசம் இருந்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் சரணடைந்த சுமார் 800 பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 600 பேர் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களாகும்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டு திருக்கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றின் சமவெளியில் வைத்து விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த நடேசனின் மேற்பார்வையில் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டிருக்கிறார்கள்.
பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் விடுதலைப் புலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. இப்படுகொலைகள் அன்றிருந்த அரசாங்கத்தின் சரியான வழிகாட்டல்கள் பொலிஸ்காரர்களுக்கு வழங்கப்படாமல் அரச அனுசரணையோடு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் கருதக் கூடிய பாரிய படுகொலையாகும்.
பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் நடந்து இன்று 11 ஆம் திகதியுடன் 30 வருடங்கள் கடந்தும் இது தொடர்பான மர்மங்கள் இன்னும் அகலவில்லை.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அன்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைகள் ஆகியோர்களுக்கே இப்படு கொலைகளின் மர்மங்கள் தெரியும்.
விடுதலைப் புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதியாகச் செயல்பட்ட கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் மஹிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்த போதிலும் பொலிஸ்காரர்களின் இந்தப் படு கொலைகளுக்குரிய பின்னணியை அவரின் ஆட்சியில் கண்டறிய முற்படவில்லை.
இது விடயத்தில் மஹிந்த அரசாங்கம் தவறிவிட்டதா? இல்லை கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கண்டும் காணாதது போல் இருந்து மறைத்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
1990 ஜுன் 11 ஆம் திகதி அன்று நிராயுதபாணியான இந்த பொலிஸ்காரர்கள் விடுதலைப் புலிகளின் ஆணைகளுக்கு இணங்கியிருந்தபோதிலும் சரணடைந்த நிலையிலும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதானது பிரிவினைவாத யுத்த வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகும்.
விடுதலைப் புலியினர் 600 பொலிஸ்காரர்களையும் படுகொலை செய்த சமயத்தில் கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக 2004 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியிருந்தார்.
இந்நிலையில் இப்படுகொலைக்கு தாம் பொறுப்புதாரி அல்ல எனவும் தான் அச்சமயத்தில் வடக்கில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கடத்தப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ்காரர்களின் இப்படுகொலைகள் இடம்பெற்று இன்று 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இது விடயத்தை நினைவு கூரும் நாம் அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
 - .எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top