நைஜீரியா கிராமத்தில்
 பயங்கரவாதிகள் தாக்குதல்
- அப்பாவி மக்கள் 59 பேர் கொன்று குவிப்பு
  
நைஜீரியா கிராமத்தில் போகாஹரம் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

நைஜீரியா நாட்டில் மத அடிப்படையிலானபோகோ ஹரம்பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இவர்களது அடிப்படை நோக்கம், அங்கு மத சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். தலைமையோ, ஒழுங்கான கட்டமைப்போ இந்த பயங்கரவாதிகளுக்கு இல்லை என்றாலும், அவ்வப்போது வன்முறை செயல்களை நடத்தி கதி கலங்க வைக்கிறார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் போர்னோ மாகாணத்தில் உள்ள பதுமோ கொலோராம் என்ற கிராமத்துக்கு ஏராளமான போகோ ஹரம் பயங்கரவாதிகள் வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று திபுதிபுவென இறங்கினர்.

அவர்கள் கைகளில் .கே. 47 துப்பாக்கிக்ள் இருந்தன. அவர்களைக் கண்டதும் அங்குள்ள மக்கள் கதிகலங்கிப்போனார்கள.

அந்த கிராம மக்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களை ரத்த வெள்ளத்தில் சாய்த்தனர். அவர்கள் அலறித்துடித்தனர். அந்த கிராமமே போர்க்களம் போல மாறிப்போனது.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து 1,200 கால்நடைகளையும், ஒட்டகங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர்.

அவர்கள் ஈவிரக்கமின்றி, காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 59 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை சிவிலியன் கூட்டு பணிக்குழு உறுப்பினர் ஒருவரும், படை வீரர் ஒருவரும் உறுதி செய்தனர்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், போகோஹரம் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக சந்தேகப்பட்டுதான் இந்த கொடூர தாக்குதல்களை அவர்கள் நடத்தி உள்ளனர் என தெரி வந்துள்ளது.

இதுபற்றி கூட்டு பணிக்குழு உறுப்பினர் கச்சல்லா பூமு கூறும்போது, “ இந்த கொடிய செயலை நாங்கள் பார்த்த இந்த நாள் ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். இந்த ஊர் மக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தாக்குதல்களை தடுத்தும் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை பயங்கரவாதிகள், பெருங்கூட்டத்துடன் வந்து இந்த கொடிய தாக்குதல்களை நடத்தி சென்றிருக்கிறார்கள்என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் நடந்த கிராமமே பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்த பயங்கரவாதிகள் இதற்கு முன்னரும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். இவர்களது தாக்குதல்களுக்கு பயந்தே லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளில் ராணுவத்துக்கு எதிராக பல முறை இவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சமீபத்திய மாதங்களில்தான் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடத்திய தாக்குதலில் 47 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களின் 10 ஆண்டு கால தாக்குதல்களில் 36 ஆயிரம் பேர் கொல்லபட்டுள்ளனர். 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

தற்போது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளான நைஜர், சாத், கேமரூன் ஆகிய நாடுகளிலும் கால் பதித்து பயங்கரவாத செயல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் சாத் நாட்டில் ராணுவத்துக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி சுமார் 100 வீரர்களை கொன்றது, இந்த பயங்கரவாதிகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top