கல்முனை பிரதேச மக்களுக்கு
படம்வரைந்து கற்பனையில்
 பல மில்லியன்களைக்கூறி
அபிவிருத்தி என படம் காட்டி
ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள்

கடந்த ஆட்சியில் 2015 ஆம் ஆண்டிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை, சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த போகின்றோம் அது சர்வதேச தரத்திலான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட நவீன மயமான முன்னணி பெரு நகர பிரதேசமாக மிளிரும் என வரைபடங்களை காட்சிப்படுத்தி தெரிவித்திருந்தார். இதற்கென கொழும்பிலும் கல்முனையிலும் பல கூட்டங்களைக் கூட்டி வரைபடங்களைத்தான் காட்டினார். ஊடகங்களிலும் பாரிய அளவில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

உத்தேச கல்முனை, சம்மாந்துறை பாரிய நகர அபிவிருத்தியின்போது துபாய், பஹ்ரைன் போன்ற நகரங்களை ஒத்ததான பெரு நகரங்களாக இது திகழும் எனவும் ஒரு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அது கல்முனை, சம்மாந்துறை பிரதேச மக்களை படம் காட்டி ஏமாற்றிய விடயமாக போய்விட்டது.

இதுபோன்றுதான் கல்முனை மாநகர சபை புதிய கட்டடமானது தற்போதைய அமைவிடத்திலே அமையப் பெறவுள்ளதோடு இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியளவில் குறித்த கட்டட நிர்மாணப் பணியின் ஆரம்ப நிகழ்வு வைபரீதியாக நடைபெறவுள்ளது என்றும்,

மேற்படி கட்டட நிர்மாணப் பணி நடைபெறுவதற்கு ஏதுவாக கல்முனை மாநகர சபையானது தற்காலிகமாக கல்முனை பொது நூலக கட்டடத்திற்கும், கல்முனை பொது நூலகமானது கல்முனை நகர மண்டபத்திற்கும் மாற்றப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் கல்முனை நகர மண்டபமானது ஒரு மாத காலப்பகுதிக்குள் ஜுலை மாத்திற்கு முன்னதாக புணர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கல்முனை மாநகர பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தவகையில் நவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்துதல், கல்முனை நகரை அழகுபடுத்தல், சிறுவர் பூங்காக்களை அமைத்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இது மாத்திரமல்லாமல், கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என கல்முனை பிரதேச அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தலைவராக இருந்தவரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சராக பதவி வகித்தவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை பிரதேச அபிவிருத்தி கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார் .

கல்முனை நவீன  நகர அபிவிருத்தி திட்டம் எந்த தடையும் இன்றி  நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண உதவியுடன் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு எந்தவொரு தடையும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார் .

அவர் அங்கு உரையாற்றுகையில் இதுகுறித்து மேலும் தெரிவித்திருந்ததாவது,

  நாட்டில் பல பிரதேசங்கள் நகர மயமாக்கல் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப் படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன . அதன் அடிப்படையில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  அவர்களின் வழிகாட்டலில்  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க  அவர்களால்  கல்முனை நகர அபிவிருத்தி  முன்னெடுக்கப்பட்டு  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக  அமைச்சரின் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  நடை பெற்றுள்ளன ..

இந்த நாட்டின் பிரதமர்  ஒரு நேர்மையானவர் அவர் வாக்களித்தால் எவர் குறுக்கே நின்றாலும் அதனை நிறைவேற்றும்  யோக்கியமான  அரசியல் செய்பவர் . கல்முனை நகர அபிவிருத்திக்கான பணம் பிரதமரால் ஏற்கனவே ஓதிக்கப்பட்டுள்ளது. மேலும்  எமது கட்சியும்  கட்சியின் தலைவருமான  ரவுப் ஹக்கீம் அவர்களும் கல்முனைக்கு அப்பால் தென் கிழக்குப் பிரதேச அபிவிருத்தியை மையப்படுத்த துருக்கி நாட்டு அரசாங்கத்துடன் பேசியுள்ளோம் . அந்த நாட்டு  உயர் அதிகாரிகளை அண்மையில் சந்தித்த போது  இதற்கான  ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும்  கடந்தகால நல்லாட்சி அரசின் முன்னெடுப்புக்களால் குறிப்பாக நாடு பூராகவும் நாம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் . அதிலும் எனது பொறுப்பில் உள்ள  விளையாட்டு துறை அமைச்சின் மூலம் பல  விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன . குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பொது விளையாட்டு மைதானங்கள் ,பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி செய்வதற்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நான் பாராளுமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவப் படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் பல மைதானங்கள் அபிவிருத்தி காணவுள்ளது அதிலும் கல்முனை சந்தான்கேணி மைதானம் சர்வதேச தரத்தில் அமையவுள்ளது என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இவைகள் போன்றுதான் நேற்று கல்முனை மாநகர சபையின் முதல்வர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கல்முனை மாநகர கட்டடத்திற்கான அழகான படங்களை வரைந்து அதனை கோவைப்படுத்தி வைத்துக்கொண்டு மக்களுக்கு கட்டடத்தின் அழகை காட்சிப்படுத்தினார்.

இது மாத்திரமல்லாமல் மற்றும் ஒரு பாரிய வர்த்தக கட்டடத்திற்கான வரைபடத்தையும் கோவையில் இருந்து காட்சிப்படுத்தி அதன் அழகையும் கூறி அது அவரின் சாதனையாக விளக்கம் கொடுத்தார்.

இவைகளை நோக்கும் போது கல்முனை பிரதேச மக்களை ஒரு சில அரசியல்வாதிகள் அபிவிருத்தி என வரைபடங்களை மாத்திரம் வரைந்து அதனைக்காட்டியும் மில்லியன் தொகையை கூறியும் தொடர்ந்தும் மக்களை அபிவிருத்தி என ஏமாற்றி காலத்தை கொண்டு சென்று விடலாம் என நினைத்து அரசியல் செய்கின்றார்கள் போல் தெரிகிறது.

இவர்களின் இந்த எண்ணம் எதிர் காலத்தில் வெற்றி அளிக்கப் போவதில்லை. ஏனெனில் தற்போது இளைஞர்கள் விழித்து விட்டார்கள். இவர்களின் செயல்பாடுகளை புரிந்து விட்டார்கள்.

கல்முனை பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்கள் தொடர்பான படங்கள் சிலவற்றை இங்கு காட்சிப்படுத்தியுள்ளோம். 













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top