கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட
முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்
கொரோனா தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடித்து சந்தைக்கு வரவில்லை. கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசி வந்திருக்கிறதா என்றால் அதுவும் பரிசோதனைகள் அளவில்தான் இருக்கின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் பல்லாயிரம் பேர் இந்த தொற்றுக்கு புதிது புதிதாக ஆளாகி வருகிறார்கள்.
இதற்கிடையே, ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (Avifavir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது. இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. மாதம் தோறும் 60,000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.