பொத்துவில் முஹுது மகாவிகாரையை
அண்டிய பிரதேசங்களை அரசு
கையக்கப்படுத்த போவதாக பரவிய செய்தி :
களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியுள்ளது.

அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் அந்த சந்திப்பு நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச செயலகத்திற்கு சமுகமளித்த மக்களின் சார்பிலான பிரதிநிதிகளை சந்திக்க பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல் இருந்த நிலையில் முஹுது மகாவிகாரை பிரதேசத்தில் நில அளவை திணைக்கள, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவிட வருகை தந்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

இந்த செய்தி பரவியதை அடுத்து மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸார், இராணுவ வீரர்கள் களத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அங்கு சமுகமளித்த வேட்பாளர் சட்டத்தரணி முஷாரப், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான எம்.எஸ். அப்துல் வாசித், ஆகியோர் அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரை தொடர்புகொண்ட போது நாளை மாலை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்த நேரம் வழங்கிய செய்தியை மக்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடங்கிய குழுவினர் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹாவிகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top