டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த
உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதியும்,
பிரதமரும் துறைசார்ந்தோருக்கு ஆலோசனை



மழையுடன் கூடிய காலநிலை தணிகையில் டெங்கு ஆட்கொல்லி தீவிரமாக பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தத் தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாகாண ஆளுநருக்கும், உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வருடந்தோறும் மேல் மாகாணத்தில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்படுவது வழக்கம். இந்த மாகாணத்திற்கு வெளியிடங்களிலிருந்து பெருமளவு ஆட்கள் வருகிறார்கள். இவர்கள் நோய்க் காவிகளாக வெளியேறிச் செல்லலாம். எனவே, மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் நோக்கத்துடன், டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒப்பீட்டளவில் குறைவான டெங்கு நோயாளிகளே இனங்காணப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். நோய் பரவுவதற்கான காரணிகளை விபரித்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் சுகாதார அதிகாரிகள் முன்வைத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top