தங்கக் கடத்தல் ராணி
ஸ்வப்னா பெங்களூரில் கைது           

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த, ஸ்வப்னாவை, பெங்களூரில், என்.ஐ.ஏ., போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, அந்நாட்டிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக,சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த, 30ம் தேதி, தூதரகத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.இந்தக் கடத்தல் தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய, சர்ஜித் என்பவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கடத்தலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில் முன்பு பணியாற்றியவரும், இப்போது, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்வப்னா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்தீப் நாயர், எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகியோருக்கு, தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இந்நிலையில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, ஸ்வப்னா மீது வழக்கு பதிவு செய்து அவரையும் மற்றவர்களையும் தேடி வந்தது.

இதற்கிடையில், ஸ்வப்னா, முன்ஜாமின் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்க, என்.ஐ.ஏ., போலீசாரும், சுங்கத்துறை அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப்நாயரை என்.ஐ.ஏ., போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இருவரையும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு, போலீசார் இன்று அழைத்து வருகின்றனர்.
யார் இந்த ஸ்வப்னா?

கேரளாவை பூர்வீகமாக உடைய ஸ்வப்னா, 34, ஐக்கிய அரபு எமிரேட்சில் பிறந்து வளர்ந்தவர். அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றிய அவர், 2013ல், கணவரிடம் விவாகரத்து பெற்று, கேரளாவுக்கு திரும்பினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது, உடன் பணியாற்றிய அதிகாரி மீது, பொய்யான புகார் கொடுத்து, சர்ச்சையில் சிக்கினார். போலீஸ் விசாரணையில், பொய் புகார் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றினார். அப்போது தான், தங்கம் கடத்துவதற்கான சதித் திட்டத்தை தீட்டி, அதை செயல்படுத்தி வந்துள்ளார்.

துாதரகத்திலும் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்ததை மறைத்தது தொடர்பாக, போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேல் மட்டத்திலிருந்து போலீசாருக்கு நெருக்கடி வந்ததாக கூறப்பட்டது. துாதரக அலுவலக பணியிலிருந்து வெளியேறிய போதும், அங்குள்ள அதிகாரிகளுடன், தொடர்பில் இருந்துள்ளார் ஸ்வப்னா.

போலி ஆவணங்களை தயாரித்து, துாதரகத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துாதரக அதிகாரிகளை சரிக்கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், அடிக்கடி, 'பார்ட்டி' கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில், பிரமாண்ட பங்களா ஒன்றையும், ஸ்வப்னா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள், ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, அவரை சந்தித்துச் செல்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னா  இப்போ கைது செய்யப்பட்டுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top