கல்முனை பிரதேச மக்களுக்காக கலாநிதி எஸ்.எல்.றியாஸ்
இன்று அடையாள உண்ணாவிரதம்

முஸ்லிம்கள் விடயத்தில் அரசு
தனது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்த வேண்டும்

புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் எந்த விதமான வேலைத்திட்டங்களும் உள்வாங்கப்படாமையை கண்டித்து கலாநிதி எஸ்.எல்.றியாஸ் 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை(04-04-2015)காலை 9.00 மணி தொடக்கம் கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் உண்விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
எஸ்.எல்.றியாஸ் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்திருப்பதாவது :- கண்ணியத்துக்குரிய உலமாக்களே! கல்விமான்களே! வர்த்தகப் பிரமுகர்களே! பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளே! அன்புக்குரிய எனது கல்முனை வாழ் உடன்பிறப்புக்களே!
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் தலைமையிலான புதிய அரசு 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வந்த வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது.
இனப்பிரச்சினையாக இருந்தாலும், இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பாரிய அழிவுக்கும், அனர்த்தத்திற்கும் முகங்கொடுத்தே வந்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாக இருந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
இருந்தாலும், கடந்த ஆட்சியில் அதிக அமைச்சர்களை கொண்ட ஒரு நாடாக எமது நாடு காணப்பட்ட போதிலும் மக்கள் குறைகேட்க எந்தவொரு அமைச்சரும் எமது பிரதேசங்களுக்கு வரவில்லை. அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் கூட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலைக்கு வருவதாக வாக்குறுதியளித்து விட்டு இன்று வரை இந்த வைத்திய சாலைக்கு வரவில்லை.
தேசிய திட்டம் தவிர்ந்த எந்தவொரு திட்டமும் கடந்தகால அரசாங்கங்களால் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர இடமளிக்க முடியாது. இந்த நாட்டில் இடம்பெறுகின்ற அபிவிருத்தியிலும் எமக்கான பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக கல்முனை என்பது ஒரு தனியான தேசமல்ல. அது இந்த நாட்டின் ஒரு அங்கம் என்பதை வலியுறுத்தும் தேவை எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது.அரசின் 100நாள் வேலைத்திட்டம் முடிவடைவதற்குள் என்னால் முன்வைக்கப்படும் மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு சாதகமாக பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

கோரிக்கைகள்

01. தற்போதை அரசு வாக்குறுதியளித்த கல்முனை புதிய நகர திட்டம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
02. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி இருக்கும் கல்முனைக்குடி பிரதேசத்திற்கென தனியான குடிநீர்த்தாங்கி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக குடிநீர் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும்
03. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத்திட்டம் பயனாளிகளிடம் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும்.
04. ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் தமது காணிகளை இழந்த, தொழில்களை இழந்த மற்றும் பல்வேறு வகையில் பாதிப்புற்ற ஒலுவில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஏற்ற வகையில் உடனடியாக நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
05. கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்பற்று தற்போது மீள்குடியேறி குடியிருப்புத்திட்டங்களில் வாழும் மக்களுக்கு எதவித நிபந்தனைகளும் இன்றி அவர்களின் வீடுகளுக்கான உரிமை (உறுதிகள்) வழங்கப்படவேண்டும்
06. சுனாமியால் தங்களது குடியிருப்பு நிலங்களை இழந்த கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்ட மக்களுக்கு 10 பேச்சர்ஸ் நிலம் அவர்களது குடியிருப்பினை அண்டிய பிரதேசத்தில் வழங்கப்பட வேண்டும்.
07. சுனாமியால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறி வாழும் இடங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் நிலையங்களை ஏற்படுத்தி இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்த வேண்டும்.
08. கல்முனை மாநகர பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காணி உறுதிகள் வழங்கப்படாத கடைகளுக்கு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.
09. சுனாமியால் முழுமையாக சேதமடைந்த கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை போதிய அடிப்படை வசதிகள் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
10. கடந்த 40 ஆண்டகளுக்கு மேல் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் இயங்கி, சுனாமி தாக்கத்தினால் சேதமான ஆயூர்வேத வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்டதாக கிறீன்பீல்ட் விPட்டுத்திட்டத்தினை அண்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும்
11. கல்முனை பொது மைதானம், பிஸ்கால் நிலம் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணிகள் அதன் உறுதிகளில் குறிப்பிட்ட வகையில் சட்டப்படி மீட்டெடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்ட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
12. சாய்ந்தமருது மீன்பிடி படகு இறங்கு துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
13. போதிய இடவசதியும் அடிப்படை வசதிகளும் இன்றி இருக்கும் கல்முனை பொதுச்சந்தை நவீனமயப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நடைபாதை வியாபாரிகளுக்கென தனியாகவும் சொந்தமாகவும் இட ஒதுக்கீடு செய்யும் பொருட்டு கல்முனை பொதுச்சந்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
14. கல்முனைக்குடி சாஹிபு வீதி மற்றும் அலியார் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஏன் இடைநடுவில் கைவிடப்பட்டது என்பது தொடர்பில் என்னால் கடந்த 25.02.2015ல் இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் என்னால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு மீண்டும் இவ்வீதிகள் உட்பட அனைத்து வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
15. கல்முனை நகர அபிவிருத்திக்கென அரசு உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

எனது கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த தவறும் பட்சத்தில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்ஷா அல்லாஹ் எனது போராட்டம் தொடரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top