கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம்

கத்தாரில் அங்குரார்ப்பணம்!

(Gulf Federation for Kalmunai)

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் மிக நீண்ட கால ஆதங்கமான கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒருங்கிணைக்கபட்ட சிவில் சமூக கட்டமைப்பானது கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 02ஆம் திகதி டோஹா, ஷாலிமார் பலஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இச்சிறப்பு மிக்க நிகழ்வில் 120 இற்கும் மேற்பட்ட கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இன்று கல்முனை மண் எதிர்நோக்குகின்ற பல்துறை சார்ந்த சவால்களுக்கு மத்திய கிழக்கில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையான இளைஞர் சக்தியின் பங்களிப்பு என்ன?” என்ற கேள்விக்கான தீர்வினை பெரும் பொருட்டு கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி கத்தார் BCAS இல் இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது எட்டப்பட்ட கூட்டு மஷூறாவின் நிமித்தம் குறித்த அமையம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியிரவு 8 மணியளவில் ஆரம்பமான நிகழ்வை சகோதரர் M.L.M ரெளஷூல் இலாஹி தொகுத்து வழங்க, நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் பொருட்டு சகோதரர் M.H.M. ரியாஸ் அவர்களால் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய சகோதரர் S.L. அன்வர் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் விடுமுறை நாளென்று பொருட்படுத்தாது நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களையும் நன்றி கூறி வரவேற்று தனது வரவேற்புரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து தலைமையேற்று உரையாற்றிய சகோதரர் முபாரிஸ் M. ஹனிபா அவர்கள் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒத்துழைப்புடனும், பரஸ்பரத்துடனும் கூடிய இவ்வமையத்தின் முக்கியத்துவத்தை விபரித்தார். மேலும் குறித்த அமையத்தின் உருவாக்கம் தொடர்பாக கடந்த காலங்களில் பல சகோதரர்களினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கியதோடு நிகழ்வில் கலந்து கொண்டவர்களினதும், கலந்து கொள்ளமுடியாமல் போன சகோதரர்களினதும் பெறுமதிமிக்க ஆலோசனைகளையும், பங்களிப்பையும் வேண்டி தனது உரையை நிறைவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து சகோதரர் S.L. ஹமீட் அவர்கள் கல்முனை மண்ணின் பல நூறு வருடங்கள் தாண்டிய வரலாற்றையும், கல்முனை மண் வரலாறு நெடுகிலும் எதிர்கொண்ட இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களையும், அதனால் நமது சமூகம் கண்ட பல்துறை சார்ந்த பாதிப்புக்களையும் விளக்கிப்பேசினார். தொடர்ந்து உரையாற்றுகையில் அத்தகைய கொடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் நமது சமூகம் ஒற்றுமையை முதலாகக்கொண்டு விடாமுயற்சியால் மீண்டெளுந்த நம்மவர்களின் வாழ்வியலை விளக்கி, கடல் கடந்து வாழும் நாமும் ஒற்றுமையை பலப்படுத்தி அதன்மூலம் நம்மை மேம்படுத்திக்கொள்ள எல்லோரும் முயற்சிக்கவேண்டும் என்று வினையமாக வேண்டிக்கொண்டார்.  
இதன்போது சகோதரர்கள் நிப்ராஸ் மன்சூர் மற்றும் A.L. நசாஜ் அவர்களினால் தொகுக்கப்பட்ட கல்முனை மாநகரத்தின் கலாசாரம், பொருளாதாரம், நம்மவர்களின் வாழ்வியல் குறித்த சிறிய ஆவணக்காணொளி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. இக்காணொளி கடல்கடந்து வாழும் எம்மவர்களுக்கு ஊரின் வாசனையை மீட்டிச்சென்றது.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய சகோதரர் M.I. பைரூஸ் அவர்கள், அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினது இலக்குகள், கவனம் செலுத்தவுள்ள துறைகள், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள செயற்திட்டங்கள், சகோதரர்களின் பங்களிப்புகள் குறித்து விளக்கியதோடு நிகழ்வில் கலந்துகொண்ட சகோதரர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  உள்வாங்க சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக உரையாற்றிய சகோதரர்  I.L.M.  சர்ஜூன் அவர்கள் சிரமம் பாராது  பல மைல்கள் கடந்துவந்து நிகழ்வில் உணர்வுடன் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி நவின்றார். தொடர்ந்து  இராப்போசன நிகழ்வுடன் நிகழ்வு இறைவனின் உதவியால் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: எமது அமையத்தில் கத்தார் வாழ் அனைத்து கல்முனை சகோதரர்களையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கினை அழுத்தி தங்களது தரவுகளை பதிவிடமும்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top