முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டு அழைப்பிதழில்

முஸ்லிம் காங்கிரஸ் பதவி நிலை முக்கியஸ்தர்கள் புறக்கணிப்பு

கட்சிப் போராளிகள் விசனம்!

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவாக நாளை மறுதினம் (2015-10-31) சாய்ந்தமருதில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டுக்கான அழைப்பிதழில் கட்சியின் சிரேஷ்ட பதவி நிலை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கட்சிப் போராளிகளினால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாநாடு அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் இடம்பெறுவதால் குறைந்தபட்சம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்கள் அழைப்பிதழில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்கட்டப்படுகின்றது 
குறிப்பாக கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான .எல்.அப்துல் மஜீத் உள்ளிட்ட கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகின்றது.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் பெயர்கள் இந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கல்முனையை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம்..ரஸ்ஸாக் அவர்களின் (ஜவாத்) பெயர் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களின் பெயர் கட்சிப் பதவி அந்தஸ்த்து ஒழுங்கு நிலையை கருத்தில் கொள்ளாமல் கீழ் நிலையில் குறிப்பிடப்பட்டு, அகௌரப்படுத்தப்பட்டிருக்கிரார் எனவும் கட்சிப் போராளிகளால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
கட்சிக்குள் புதிதாக வந்து சேர்கின்ற அரசியல் வாதிகள் முதலில் கட்சியின் யாப்பு, ஒழுக்க நெறிக்கோவை மற்றும் பதவி நிலை அந்தஸ்த்துகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கட்சியின் மூத்த போராளிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, ஆரம்ப காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் பொதுக் கூட்டங்களில் இடம்பெறும் அன்னாரின் உரைகளையும் கட்சியினது செய்திகளையும் கூட்டங்கள் நள்ளிரவைக் கடந்தும் அதுவரை காத்திருந்து செய்திகளை சேகரித்து அன்று செய்தி ஊடகங்களுக்கு எழுதி வந்த அம்பாறை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம் சஹாப்தீன், ஏ.எல்.ஜுனைதீன்,  மீரா இஸ்ஸதீன், அப்துல் கரீம், எம்.ஏ.பக்றுதீன் யூ.சம்சுதீன் (மிஸ்கீன்), எஸ்.எம்.எம்.பிக்கீர் போன்றவர்கள் கட்சியினால் எப்போதாவது கெளரவிக்கப்ட்டிருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top