போர்க் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை
சென்னையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா நிகழ்வும் சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நேற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
கவிக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா குழுவின் ஏற்பாட்டில் இருநாள் நிகழ்வாக நேற்றும் இன்றும் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து விஷேட பேராளராக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சென்று நிகழ்வினை ஆரம்பித்து வைத்து பவள விழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமானை பாராட்டி கவிதையினை பாடி சபையோரை அதிர வைத்தார்.
இதில் இலங்கையிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸன் அலி, முத்தலிபா பாரூக், எம்.அஸ்லம், கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், அவரின் பாரியார், மணிப்புலவர் மருதூர் .மஜீத், டாக்டர் தாஸிம் அகமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சென்னையில் நடைபெறும் விழாவுக்கு சென்றிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
இலங்கை- இந்திய அரசு இடையே உள்ள சுமுகமான உறவு நல்ல முறையில் நீடிக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
 தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பி தர தற்போதய அரசு உறுதியாக உள்ளது.
 ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார். இது ஆரோக்கியமான அரசியல். அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்.
 ரூ.15 கோடி அபராதம் என்ற பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம்: இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி, இலங்கையில் மீன் பிடித்தால் அவர்களை கைது செய்வதோடு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அதிகாரி பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும்.

 இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்க் குற்றம் நடந்திருப்பதாக விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவிதச் சந்தேகமும்இல்லை. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்  இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top